யாழில் உள்ள மிக பழமையான இந்து ஆலயம் இடித்து அழிப்பு!!

601

இந்து ஆலயம் இடித்து அழிப்பு

யாழ்.சுண்டுக்குளி பகுதியில் அமைந்திருந்த மிக பழமையான இந்து ஆலயம் ஒன்று இடித்து அழிக்கப்பட்டுள்ளது. யாழ்.சுண்டுக்குளி, மூலாய் வீதியில் உள்ள ஸ்ரீ ஞான வைரவர் ஆலயத்தில் மிக நீண்டகாலமாக அப்பகுதி மக்கள் வழிபாடுகள் மேற்கொண்டு பராமரித்து வந்தனர்.

இந்நிலையில் இந்த ஆலயத்தை உருவாக்கியவரின் பிள்ளைகளுக்கிடையில் தொடர்ச்சியான முரண்பாடுகள் இருந்து வந்த நிலையில் நேற்று நள்ளிரவு ஆலயத்திற்குள் நுழைந்த சிலர் ஆலய கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். அத்துடன், அங்கிருந்த விக்கிரகங்களை எடுத்து சென்றுள்ளனர்.

இதனையடுத்து ஆலய நிர்வாகத்தினரும், பொதுமக்களும் இணைந்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்திருக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பில் அவர்களை தொடர்பு கொண்டு வினவிய போது,

ஆலயத்தை உருவாக்கியவரின் பிள்ளைகளுக்கிடையிலான சில முரண்பாடுகளாலேயே ஆலயம் உடைக்கப்பட்டிருப்பதாக அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதுடன், அந்த ஆலயம் மிக பழமையான ஆலயம் எனவும், பெருமளவு மக்களால் வழிபடப்பட்டு வந்த நிலையில் இவ்வாறான துரதிஷ்டவசமான சம்பவம் இடம்பெற்றுள்ளதெனவும் கூறியுள்ளனர்.

சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார். இந்த ஆலயத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இவ் ஆண்டு ஒரு தொகை பணத்தை ஒதுக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் ஆலயம் இடிக்கப்பட்டமை தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.