முல்லைத்தீவில் பணம் கொடுத்து ஒரு லீற்றர் நீர் வாங்க வேண்டிய அவலநிலை!!

210

அவலநிலை

முல்லைத்தீவு மாவட்டத்தின் இறுதி போர் நடைபெற்ற பகுதிகளில் ஒன்றாக காணப்படும் ஆனந்தபுரம் பகுதியில் வாழ்கின்ற அனைத்து குடும்பங்களும் குடிநீரினை பணம் கொடுத்து பெற்றுக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

250 வரையான குடும்பங்கள் வாழ்கின்ற இந்த கிராமத்தில் மக்களின் காணிகளில் உள்ள கிணறுகளின் நீரினை குடிப்பதற்கு பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. குறிப்பாக உவர் நீராகவும் காவிபடிந்த நீராகவும் இவை காணப்படுவதால் மக்கள் பணம் கொடுத்தே நீரினை பெற்றுக்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

ஆனந்தா என்ற நீர்விநியோக அமைப்பினால் ஒரு லீற்றர் நீர் ஒரு ரூபாவிற்கு விநியோகம் செய்துவருவதாக ஆனந்தா அமைப்பின் தலைவர் றாஜா திருமேனி தெரிவித்துள்ளார்.

1959ஆம் ஆண்டு குடியேற்றத்திட்டமாக உருவாக்கப்பட்ட கிராமம் இது ஒரு உவர்நீர் பிரதேசமாக காணப்பட்டுள்ளது. சில கிணறுகள் சமையல் பாவனைக்கு பாவிக்கக்கூடியதாக இருந்துள்ளது.

இருநூற்றி ஐம்பது வரையான குடும்பங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றார்கள் கடும் வறட்சிகாலத்தில் பிரதேச செயலரின் உதவியுடன் தண்ணீர் பௌசர்களால் நீர் வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது கடும் வறட்சியான காலநிலை நீர் பிரச்சினையால் மக்கள் பலர் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலைகூட வந்துள்ளது.

வைத்திய ஆய்வின் படி கிட்னி பிரச்சினை இந்த கிராமத்திலும் அதிகளவில் இருக்கென்ற ஆய்வின் பிரகாரம் கேலீஸ் நிறுவனத்தினால் வடிகட்டப்பட்ட குடிநீர்பம்பி ஒன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

இந்த மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு இந்த பில்டர் குடிநீர் பம்பி ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதில் ஏற்படும் செலவீனங்களுக்கான ஒரு லீற்றர் ஒரு ரூபா படி மக்களுக்கு வழங்கி வருகின்றோம் என்றும் தெரிவித்த அவர்,

கடந்த 2016ஆம் ஆண்டு இந்த பில்டர் தண்ணீர் தாங்கி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஒரு அமைப்பினை நிறுவி கிராம மக்களாக நாங்கள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.

விசுவமடுவில் இருந்து சாலையில் இருந்து இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, பொக்கணை, மாத்தளன், வலைஞர்மடம், கைவேலி, தேவிபுரம் போன்ற பகுதிகளில் இருந்துகூட இங்கு குடிநீரினை பெற்றுக்கொள்வதற்காக வருகின்றார்கள்.

நாளாந்தம் நான்காயிரம் லீற்றர் வரை சராசரி நீரினை வழங்கி வருகின்றோம். அருகில் உள்ள கிராமங்களில் 15 இடங்களில் குடிநீர் தாங்கி வைத்து குடிநீரினை குறைந்த பணத்திற்கு விநியோகம் செய்துவருகின்றோம். ஏனைய மக்கள் இங்குவந்து குடிநீரினை எடுத்து செல்கின்றார்கள்.

ஆனந்தபுரம் பகுதியில் உள்ள மக்களின் கிணறுகளில் உள்ள அனைத்து நீரூம் மஞ்சல் நிறமாக மாறியுள்ளது இதனால் இந்த நீர் ஒன்றிற்குமே உதவாத நீராக மாறியுள்ளது.

ஆனந்தபுரத்திற்கு என்று நீர்வழங்கள் வடிகால் அமைப்பு சபையினால் நீர்விநியோகத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டு அது புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கே நீரினை வழங்கும் திட்டமாக மாறியுள்ளது. அது எந்த காலப்பகுதியில் கிடைக்கும் என்று தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.