மிஸ் இங்கிலாந்து அழகி போட் டி : இறுதி சுற்றில் இலங்கை தமிழ் பெண்!!

383

திலானி செல்வானந்தன்

மிஸ் இங்கிலாந்து அழகி போட்டியின் இறுதி சுற்றுக்கு முதன்முறையாக இலங்கை தமிழ் பெண் திலானி செல்வானந்தன் தெரிவாகியுள்ளார். பல்வேறு போராட்டங்களை கடந்து இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கும் அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து திலானி செல்வானந்தன் கருத்து வெளியிடுகையில்.

“மிஸ் இங்கிலாந்தின் இறுதிப் போட்டிக்கு வந்த முதல் இலங்கை தமிழ் பெண்ணாக நான் இருப்பது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. இது எனது வாழ்க்கையில் மிகவும் கடினமான சவால்களில் ஒன்றாகும். ஏனெனில் எனது கலாசாரம் மற்றும் பின்னணியில் இருந்து பார்க்கும் போது பலரும் இந்த முயற்சியை எடுக்க மாட்டார்கள். அதனால் தான் நான் மற்றவர்களின் கண் பார்வையில் வித்தியாசமாக தெரிகிறேன்.

இந்த போட்டியில் சேர்ந்தன் மூலம், எனது சுயமரியாதையையும், நம்பிக்கையையும் பன்மடங்காக அதிகரித்துள்ளதாக உணர்கிறேன். மேலும் இந்த போட்டிகளைப் பற்றி மற்ற தமிழ் மக்களுக்கு தெரியப்படுத்தவும் விரும்பினேன்.

உதாரணமாக சிலர் தங்கள் வீட்டு பெண்களை குறுகிய ஆடைகளுடன் போட்டிகளில் பங்கேற்க விரும்புவதில்லை. அவர்களுக்குள் எத்தனை திறமைகள் இருந்தாலும் அவர்கள் வீட்டிலேயே பூட்டி வைக்கப்படுகின்றனர்.

என்னை பற்றி கூற வேண்டும் என்றால், நான் என் குடும்பத்தில் மூத்தவள், சிறு வயதிலிருந்தே என் தந்தை உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக வேலை செய்வதை நிறுத்திவிட்டார். குடும்ப பாரத்தை சுமப்பதற்காகவே என் அம்மா மொத்த உழைப்பை தனது தோளில் சுமந்தார்.

அவரை பார்த்த பின்பு, எனது உடன்பிறப்புகளுக்கும், பெற்றோர்களுக்கு நல்ல பெயரை வாங்கி தர வேண்டும் அவர்களை நல்ல முறையில் வழிநடத்தி செல்ல வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தது.

நான் மிகவும் ஆர்வமுடையவள். முயற்சியை நம்புபவள். தொடர்ந்து பல்வேறு விடயங்களை விடாமல் முயற்சி செய்து வருகிறேன். நான் ஏதாவது செய்யும்போதெல்லாம் என் அம்மாவை பெருமைப்படுத்துவது பற்றி தான் முதல் எண்ண ஓட்டம் வரும்.

எங்களுக்காக அவர், எவ்வளவு கடினமான உழைப்பை மேற்கொண்டார் என்பது எனக்கு ஞாபகத்தில் வந்துகொண்டே இருக்கும். நான் செய்வது எல்லாமே கண்டிப்பாக அவரை பெருமைப்படுத்தும் என நம்புகிறேன்.

என்னுடைய 13வது வயதில் புல்லீஸாட் என்ற தொண்டு நிறுவனத்தின் இளம் தூதராக தெரிவானேன். அப்போதில் இருந்தே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

பலரின் வழிகாட்டில் உதவியோடு இன்று இந்த இடத்தில் நிற்கிறேன். மிஸ் இங்கிலாந்தில் பங்கேற்பது எனது பயத்தை போக்கிக்கொள்ளவும் என்னை நானே முழுமையாக நம்பவும் ஒரு மிகச் சிறந்த பாதையாக இருக்கும் என நம்புகிறேன்.

இந்த போட்டி வெறும் அழகு மற்றும் தோற்றத்திற்கானது மட்டுமில்லை. ஆளுமை, அறிவுத்திறன், கடின உழைப்பு மற்றும் சவால்கள் நிறைந்தது. இறுதிப்பேட்டி எனக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என நம்புகிறேன்.

அதற்காக காத்திருக்கிறேன். என்னைப் பற்றி மக்களுக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன. எனக்கு கிரிக்கெட் மற்றும் கால்பந்து என்றால் மிகவும் இஷ்டம்.

நான் டேக்வாண்டோவில் 2வது டான் பிளாக் பெல்ட் மற்றும் முன்னாள் ஏர் கேடட். முறைப்படி பரதநாட்டியம் கற்றுள்ளேன்.

ஓய்வு நேரத்தில் தையல், ஓவியம், கேமிங், அனிமேஷன், நடிப்பு, இசையமைத்தல், புகைப்படம் எடுத்தல், உலகம் முழுவதிலுமிருந்து நாணயங்களை சேகரித்தல் என பல பொழுதுபோக்குகளை நான் ரசித்து செய்வேன்.

அவை எனக்கு உற்சாகத்தையும் அளிக்கின்றன. இதனால் நான் தொடர்ந்து புதிய விஷயங்களை முயற்சிக்கிறேன். ஜாக் பெட்சே விருது போன்ற பல விருதுகளை நான் பெற்றுள்ளேன்.

இந்த மிஸ் இங்கிலாந்து போட்டி எனது இத்தனை ஆண்டுகள் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக தான் உணர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.