பெங்களூர் திரைப்பட விழாவில் கலந்துகொண்ட கமலஹாசனுக்கு எதிர்ப்பு!!

251

Kamalபெங்களூர் பட விழாவில் தமிழ் படங்கள் புறக்கணிக்கப்பட்டதால் அதன் தொடக்க விழாவில் பங்கேற்ற கமலஹாசனுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பெங்களூரில் 6வது சர்வதேச திரைப்பட விழா துவங்கியுள்ளது. ஜனவரி 2ம் திகதி வரை இவ்விழா நடக்கிறது. இதில் 52 நாடுகளில் இருந்து 160க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

கன்னட நடிகர் ராஜ்குமார் நடித்த படங்களும் இதில் திரையிடப்படுகின்றன. ஆனால் தமிழ் படங்கள் ஒன்று கூட திரையிடப்படவில்லை. தமிழ் படங்களை திட்டமிட்டு புறக்கணித்துள்ளதாக தமிழ் திரையுலகினர் கொதிப்படைந்துள்ளனர்.

பெங்களூரில் நேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்த இதன் துவக்க விழா நிகழ்ச்சியில் நடிகர் கமலஹாசன் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.

கர்நாடக மந்திரி அம்பரீஷ், நடிகர் சுதீப், ரம்யா எம்.பி., ராதிகா பண்டிட் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஈரானிய திரைப்பட இயக்குனர் பெளரான டேரக்ஷன்டே, ஜேர்மன் பட இயக்குனர் ஹெயின்ஸ் ஜார்ஜ், பெட்வீட்ஸ், போன்றோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

இவ்விழாவில் கமலஹாசன் கலந்து கொண்டது தமிழ்பட உலகினர் மத்தியில் வேதனை ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீப காலமாக தமிழ் படங்கள் சர்வதேச அளவில் பேசப்படுகின்றன.

வெளிநாடுகளில் வசூல் குவிகிறது. தொழில் நுட்ப தரத்திலும் ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடுகின்றன. அத்தகு சிறப்பு மிகுந்த தமிழ் படங்களை புறக்கணித்தது ஏன் என்று திரைப்பட விழாவை ஏற்பாடு செய்தவர்ளிடம் கேட்டபோது கர்நாடகாவை சேர்ந்த 12 பேர் கொண்ட குழுவினர் தேர்வு செய்த படங்களையே திரையிடுகிறோம் என்றனர்.