வவுனியா குட்செட் வீதியில் பதற்றநிலை!!

764

பதற்றநிலை

வவுனியா குட்செட் வீதியில் அமைந்துள்ள மீன்கடையினை வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினர் அகற்றமுயன்றதினால் இன்று (29.07.2019) மாலை அவ்விடத்தில் சற்று பதற்றமான நிலை காணப்பட்டது.

குட்செட் வீதியில் உள்ள மீன்கடையினை அகற்றுமாறு வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் (ரவி) மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மீன்கடை உரிமையாளரிடம் தெரிவித்துள்ளனர்.

இதன்போது அவ்விடத்தில் பொதுமக்களுக்கும் பிரதேச சபை தவிசாளருக்குமிடையே கருத்து முறண்பாடு ஏற்பட்டது. அதன் பின்னர் பிரதேசசபை தவிசாளர் மீன்கடையினை மூடுமாறும் அலுவலத்தில் வந்து தன்னை சந்திக்குமாறு தெரிவித்துள்ளார்.

பிரதேச சபை தவிசாளரின் உத்தரவினையடுத்து மீன் கடை உரிமையாளர் 50கிலோ மீனை பட்டாரக வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவ்விடத்திலிருந்து அகன்று சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பாதிப்படைந்த மீன் விற்பனை நிலைய உரிமையாளர் தெரிவிக்கையில்,

இரண்டு வருடங்களாக நான் குட்செட் வீதியில் வியாபாரம் மேற்கொண்டு வருகின்றேன். தற்போது பிரதேசசபையினர் அகற்றுமாறு தெரிவிக்கின்றனர். துவிச்சக்கரவண்டி மற்றும் வாகனத்தில் வியாபாரம் மேற்கொள்ளுபவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத பிரதேசசபையினர் எனது வியாபார நிலையத்தினை மாத்திரம் குறிவைத்து அகற்ற முயல்வது ஏன்? விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட 50கிலோ மீன்களை என்ன செய்வது? என விசனம் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளரிடம் கேட்டபோது, அப்பகுதியில் பிரதேச சபையினரால் மீன் விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான நபர்களின் செயற்பாட்டினால் பிரதேச சபையினரால் அமைக்கப்பட்ட மீன் விற்பனை நிலையத்தில் வியாபார நடவடிக்கை மந்தகதியில் இடம்பெறுவதுடன் பல முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதன் காரணமாகவே பிரதேசசபையின் அனுமதியின்றி அமைக்கப்பட்ட குறித்த மீன் விற்பனை நிலையத்தினை அகற்றினோம் என தெரிவித்தார்.