வவுனியா தனியார் பஸ் உரிமையாளர்களின் பணி பகிஸ்கரிப்பு கைவிடப்பட்டது!!

588

busவவுனியா மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினரால் தூர இடங்களுக்கான போக்குவரத்தை நிறுத்தும் பகிஸ்கரிப்பு போராட்டம் இன்று மாலை முடிவுக்கு வந்துள்ளதாக வவுனியா மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கே.இராஜேஸ்வரன் தெரிவித்தார்.

பரந்தன் ஊடாக முல்லைத்தீவுக்கு சென்ற வவுனியா சங்கத்தை சேர்ந்த பஸ்களை பரந்தன் சந்தியில் கிளிநொச்சி பஸ் உரிமையாளர்கள் மறித்து வைத்துள்ளனர் எனவும் அவற்றை விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்து வவுனியா பஸ் உரிமையாளர் சங்கத்தினால் தூர இடங்களுக்கான பஸ் பகிஸ்கரிப்பு இடம்பெற்றது.

இதன் காரணமாக மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியிருந்தனர். இதேவேளை அரச பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த பஸ்களில் மக்கள் முண்டியடித்து ஏறமுற்பட்டதால், வயோதிபர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியிருந்தனர்.

இந்த நிலையில் இன்று மாலை வட மாகாண பஸ் உரிமையாளர் சங்கங்களின் தலைவர்களுக்கிடையில் ஏற்பட்ட கலந்துரையாடலின் அடிப்படையில் பகிஸ்கரிப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை நேற்று வவுனியா தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தால் முறைகேடான விதத்தில் சில இடங்களுக்கு சேவை இடம் பெறுவதாகவும் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரி வவுனியா மாவட்டம் தவிர்ந்த வட மாகாணத்தை சேர்ந்த ஏனைய மாவட்ட தனியார் பஸ்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.