வவுனியா சிறைச்சாலைக்கு சென்ற அனந்தி சசிதரன் : ஏன் தெரியுமா?

667

அனந்தி சசிதரன்

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஏழு பேரை சந்திக்க வடமாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் இன்றையதினம் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். மீனவர்களை சந்தித்து அவர்களின் விடுதலையை துரிதப்படுத்துவதற்காகவும் ஆறுதல் தெரிவிப்பதற்காகவும் அவர் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் ஏழுபேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியிருந்தனர். இதையடுத்து வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏழு மீனவர்களையும் நேரில் சென்று சந்தித்து அவர்களின் விடுதலையை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதற்காக இன்று வவுனியா சிறைச்சாலைக்குச் சென்றுள்ளதாக அனந்தி சசிதரன் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

கடந்த 27ஆம் திகதி அதிகாலை தொழில் நிமிர்த்தம் கடலுக்குச் சென்ற இந்திய மீனவர்களின் படகில் டீசல் இல்லாத காரணத்தினால் தரித்து நின்ற படகை இலங்கை கடற்படையினர் இலங்கைக்கு கொண்டு வந்து குறித்த ஏழு மீனவர்களையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏழு மீனவர்களையும் பார்வையிடுவதற்காகவும் மதுரையிலுள்ள பிரபலமான சட்டத்தரணி தீரன் திருமுருகனின் வேண்டுதலுக்கு அமைய நேரில் சென்று பார்வையிட்டுள்ளேன்.


டீசலை வழங்கி இலங்கை கடற்படையினர் தங்களை திருப்பி அனுப்புவார்கள் என கைது செய்யப்பட்ட மீனவர்கள் நம்பி இருந்தனர். எனினும் அவர்கள் இவ்வாறு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அவர்களின் குடும்பத்தினருக்கு இத்தகவல்களை வழங்குவதற்காக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரனுடன் கதைத்துள்ளேன். இவர்களின் விடுதலை தொடர்பான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த மீனவர்கள் மிக விரைவில் நாடு திரும்புவர் என நம்புகின்றேன். மேலும் அவர்களுக்கு ஆறுதல் வழங்கியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.