திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி : மேலும் சில மனித எச்சங்கள் மீட்பு!!(படங்கள்)

603

திருக்கேதீஸ்வரம் பிரதேசத்தில் நேற்று மனித எச்சங்களை தேடும் பணியின் போது மேலும் சில மனித எலும்பு கூடுகளும் எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நேற்று காலை 8:30 மணியளவில் மன்னார் மாவட்ட நீதவான் ஆனந்தி கனகரெட்ணம் முன்னிலையில் இத்தேடுதல் பணிகள் நடைபெற்றது.

இதன்போது குறித்த பகுதியில் பாதையின் நடைபாதையின் ஒரு பகுதி அகற்றப்பட்டு அகழ்வு வேலைகள் நடைபெற்றன. மேலும் சில மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதேவேளை மனித எச்சங்களை தேடிக்கண்டு பிடிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

குறித்த மனித எச்சங்களை தேடும் பணிகளுக்கென அனுராதபுரம் சட்டவைத்திய அதிகாரி டி.எல்.வைத்தியரெட்ண தலைமையில் சட்ட வைத்திய நிபுணர்கள் பகுப்பாய்விற்கென பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு, பேராதனை பல்கலைக்கழக பகுப்பாய்வு அதிகாரி கே.நந்தசேன, தொல்பொருள் திணைக்கள அதிகாரி ஏ.விஜயரத்தின உள்ளிட்ட பல துறைசார் நிபுணபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை மாந்தை பகுதியில் மனித எச்சங்கள் சில மீட்கப்பட்டுள்ளன. மாந்தை சந்தியிலிருந்து திருக்கேதீஸ்வரம் செல்லும் பாதையில் 50 மீற்றர் தூரத்தில் பாதையின் அருகே நீர் வடிகாலமைப்பிற்காக வேலைக்காக நிலம் தோண்டப்பட்டபோது மனித எச்சங்கள் மீட்கப்பட்டன.

மேலும் இதன்போது மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது 10இற்கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டிருந்தன.
இன்றைய அகழ்வுப் பணிகளை பார்வையிட வன்னி மாவட்ட ததேகூ பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குறித்த இடத்திற்கு வருகை தந்திருந்தார்.

1
32