வவுனியா அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் துப்பாக்கி கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர் : ரிஷாட்டின் அதிரடி பதில்!!

633

வவுனியா அபிவிருத்தி குழுக் கூட்டம்

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று(01.08) மதியம் 2 மணியளவில் வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமாகியது. இந்த கூட்டத்தில் துப்பாக்கி இருந்தால் எமக்கும் தாருங்கள் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேட்டிருந்தார்.

இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் அண்மைக்காலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட சொட் கன்கள் (துப்பாக்கி) மீள் எடுக்கப்பட்டமையினால் தற்போது விவசாயிகள் வன விலங்குகளால் பெரும் துன்பங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக தெரிவித்திருந்தார். அத்துடன் விவசாயிகளுக்கு வனவிலங்குகளின் தாக்கம் அதிகரித்து வருவதனால் அவர்களது பொருளாதாரமும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

எனவே அவர்களுக்கு மீண்டும் சொட் கன் (துப்பாக்கிகள்) வழங்க சிவசக்தி ஆனந்தன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இதன்போது எவ்வாறு துப்பாக்கியை வழங்கலாம் என அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரான ரிசாட் பதியுதீன் பொலிஸாரிடம் கேட்டபோது அவர்கள் பாதுகாப்பு அமைச்சில் அனுமதி பெறவேண்டும் என தெரிவித்தனர்.

அத்துடன் இராணுவ அதிகாரியும் குறித்த அனுமதியை இராணுவத்தினர் வழங்க முடியாது எனவும் தெரிவித்த நிலையில் வவுனியா அரசாங்க அதிபர் குறித்த விண்ணப்பம் மாவட்ட செலயத்தில் பெறப்பட வேண்டும் எனவும் அவ் விண்ணப்பத்தினை பெற்று அதற்குரிய பொறிமுறைகளின் பிரகாரம் மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க முடியும் எனவும் அதன் பின்னர் அனுமதி பெற்று அதனை வழங்க நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

இதன்போது குறுக்கிட்ட வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தமக்கும் ஒரு துப்பாக்கியை தந்தால் நல்லது என நகைச்சுவையாக தெரிவித்தார். இதன்போது அமைச்சர் ரிசாட் பதியுதீன் பழைய ஞாபகங்கள் வந்துள்ளது போல் உள்ளது என செல்வம் அடைக்கலநாதனை பார்த்து நகைச்சுவையாக தெரிவித்திருந்தார்.