வவுனியாவில் தேசிய ரீதியில் குத்துச்சண்டையில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்வு!!

5


பாராட்டு நிகழ்வு


தேசிய ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டையில் பதக்கம் பெற்ற வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியின் அதிபர் பி.பூலோகசிங்கம் தலைமையில் நடைபெற்றது.அகில இலங்கை ரீதியில் 2019 யூன் 28 அன்று மாத்தறையில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்டு பதக்கங்களை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் கலந்து கொண்டிருந்தார்.


அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் மிகக்குறைந்த வயதில் (07) பங்குபற்றி தங்கப்பதக்கம் பெற்றதுடன் வடக்கு மாகாணத்தில் குறைந்த வயதில் தங்கப்பதக்கம் பெற்றவர் என்ற சாதனையை நிலைநாட்டிய ஆர்.கே.மைக்கல் நிம்றொத் என்ற மாணவனும் மற்றும் பதக்கங்களை பெற்ற என்.றோசி மஞ்சு, எஸ்.றிசாந்தன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.


நிகழ்வில் விருந்தினர்கள் தேசிய ரீதியில் பதக்கம் வென்ற மாணவர்கள் மாலை அணிவித்து பாண்ட் வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டு அவர்களுக்கான பதக்கங்கள் அணிவிக்கப்பட்டதுடன் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.


நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்), தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார் (கண்ணன்), கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் என்.வி.சுந்தராங்கன், அசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கல்லூரியின் அதிபர் பி.பூபாலசிங்கம் கருத்து தெரிவிக்கையில், மாணவர்களின் திறமைகளை இனங்கண்டு வளர்க்க வேண்டும், பெற்றோரின் வழிகாட்டல்கள் பிள்ளைகளுக்கு மிக முக்கியமானது.
மைக்கல் நிம்றொத் மிகச்சிறிய வயதில் மாகாணத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார் என தெரிவித்தார்.

நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் வவுனியா கோவில்குளம் இந்து கல்லூரி மாணவன் ஏழு வயதில் தங்கப்பதக்கம் பெற்றதானது இலங்கைக்கு பெருமை சேர்க்கும் விடயம். இந்த விடயம் ஜனாதிபதியின் மட்டத்திற்கு எடுத்து செல்லப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த வடக்கு மாகாணத்தின் கிக் பொக்சிங் பயிற்றுவிப்பாளர் எஸ்.நந்தகுமார், மாணவர்கள் விளையாட்டுத் துறையை தெரிவு செய்து அதில் சாதிக்கும் போது அரசாங்க வேலை வாய்ப்புக்களை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.