இலங்கையில் தனியார் துறை ஊழியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!!

551

மகிழ்ச்சியான செய்தி

அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டமைக்கு அமைவாக தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக நேற்று நாடாளுமன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் கயந்த கருணாதிலக இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 2500 ரூபா சம்பள அதிகரிப்பு இதுவரை தனியார் துறை ஊழியர்களுக்கு கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். கூட்டுத்தாபனம், நியாயாதிக்கசபை நிறுவனங்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு இந்த 2,500 ரூபா சம்பள அதிகரிப்பு கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதற்கு அமைச்சர் கஜந்த கருணாதிலக பதில் உரைக்கையில்,

எமது அரசாங்கத்தினால் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட 2016ஆம் ஆண்டு இலக்கம் 3இன் கீழான தேசிய வேதன சம்பள கொடுப்பனவிற்கு அமைவாக தனியார் துறை ஊழியர்களின் ஆகக் குறைந்த அடிப்படை சம்பளம் 10 ஆயிரம் ரூபாவாக செலுத்தப்பட வேண்டும்.

இந்த அடிப்படை சம்பளமான 10,000 ரூபா 12,500 ரூபாவாக அதிகரிப்பதற்காக அதாவது 2,500 ரூபாவால் சம்பளத்தை அதிகரிப்பதற்கு என்னால் அமைச்சரவையின் அங்கீகாரத்துக்காக 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி அன்று சமர்ப்பித்த ஆவணத்திற்கு அங்கீகாரத்தை பெற்று கொண்டதுடன், இதனை நடைமுறைப்படுத்துவதற்காக சட்ட வரைவு அந்த பிரிவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை நான் சபையில் தெரிவித்து கொள்ள விரும்புகின்றேன்.

இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து ஆக குறைந்த சம்பளம் தற்போது நடைமுறையில் உள்ள 2005ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட நிவாரணத்திற்கு உட்பட்ட வகையில் தனியார் துறையினரின் அடிப்படை சம்பளம் 16,000 ரூபாவாக அதிகரிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக நிர்வாகம் மற்றும் கட்டளைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் சம்பள அதிகரிப்பு சபையின் மூலம் இதற்கான நடவடிக்கை தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு அமைவான 2019ஆம் ஆண்டில் சம்பள அதிகரிப்பு சபை சம்பள அதிகரிப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்த நடைமுறைகளுக்கு அமைவாக அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை போன்று தனியார் துறையினரின் சம்பள அதிகரிப்பிற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில காலங்களாக அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது தனியார் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதானது தனியார் ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.