வவுனியா நெளுக்குளம் சித்த ஆயுர்வேத வைத்தியசாலையில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டோரை பராமரிக்கும் நிலையம்!!

354

vavuniyaவடமாகாணத்தில் யுத்த காலத்தில் முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு நடமாட முடியாதுள்ளவர்களை பராமரிக்கும் செயற்பாட்டை வட மாகாணசபை முன்னெடுக்கவுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

வவுனியா நெளுக்குளத்தில் அமைந்துள்ள சித்த ஆயுர்வேத வைத்தியசாலையில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோரை பராமரிக்கும் விடுதி திருத்த வேலைகளை பார்வையிட்டதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தொவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்.. யுத்தம் காரணமாக பல இளைஞர் யுவதிகள் நடமாட முடியாது காணப்படுகின்றனர். இவர்களில் சிலர் தகுந்த பராமரிப்பு இன்மையால் மரணித்தும் உள்ளமையால் அவர்களை வட மாகாண சபையின் கீழ் சுகாதார அமைச்சு பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில் வவுனியா ஆயுர்வேத வைத்தியசாலையில் யுத்த காலத்தில் அரசசார்பற்ற நிறுவனம் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்க பயன்படுத்திய விடுதியை திருத்தம் செய்து எதிர்வரும் மாத்தில் இருந்து இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்

இவ் விடுத்தியில் தங்குமிடம், உணவு உட்பட பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதுடன் அவர்களை முழு நேரமும் பராமரிப்பதற்கான செயற்பாட்டையும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது 20 தனி அறை வசதிகளுடன் விடுதி உள்ள போதிலும் பலர் இதற்கு விண்ணப்பிப்பதனால் எதிர்காலத்தில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களிலும் இவ்வாறான பராமரிப்பு விடுதிகளை ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை இப் பராமரிப்பு விடுதியில் தங்கி வாழ விருப்பமுள்ளவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள சுகாதார அமைச்சின் அலுவலகத்திலும் வவுனியா தாதியர் கல்லூரியில் அமைந்துள்ள சுகாதார அமைச்சின் உப அலுவலகத்திலும் வவுனியா சித்த ஆயுர்வேத வைத்தியசாலையிலும் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.