மழை வேண்டி கழுதைகளுக்கு கல்யாணம்!!

549


கழுதைகளுக்கு கல்யாணம்



மழை பெய்ய வேண்டி, தமிழகத்தின் கோவை அருகேயுள்ள மூன்று கிராம மக்கள் ஒன்றிணைந்து கழுதைகளுக்கு திருமணம் நடத்தி வைத்துள்ளனர். இந்தியாவின் தமிழகத்தின் கோவை மாவட்டத்தின் வடக்கு பகுதியில் கடுமையான வறட்சி நிலவுகிறது. குறிப்பாக, அன்னூர் ஒன்றியத்தில் மழை இல்லாமல் நுாற்றுக்கணக்கான ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டன.



மானாவாரி பயிர் செய்வது குறைந்து விட்டது. ஆடு, மாடுகளுக்கு தீவனம் இல்லாததால் பலர் அதை விற்று வருகின்றனர். இந்நிலையில், அக்கரை செங்கப்பள்ளி, லக்கேபாளையம், எல்.கோவில்பாளையம் ஆகிய கிராம மக்கள் ஒன்றுகூடி ஊர் கூட்டம் நடத்தினர்.




அதில், ‘கிராமங்களில் வறட்சி நிலவுவதால், கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் மழை பெய்யும்’ என ஊர் பெரியவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, ஈரோடு மாவட்டத்தில் இருந்து நான்கு வயதுள்ள ஆண் மற்றும் பெண் கழுதைகளை லக்கேபாளையம் கொண்டு வந்தனர்.


அங்கு, அந்த கழுதைகளை குளிப்பாட்டி, ஆண் கழுதைக்கு வேட்டியும், பெண் கழுதைக்கு சேலையும் அணிவித்தனர். இதையடுத்து, அங்குள்ள 100 ஆண்டு பழமையான சுப்ரமணியர் கோயில் முன்பு கெட்டிமேளம் முழங்க திருமணம் நடந்தது.

ஆண் கழுதை சார்பில், நல்லூர் அருளான் என்பவர் பெண் கழுதைக்கு தாலி கட்டினார். பின்னர், மேள தாளம் முழங்க இரண்டு கழுதைகளையும் ஊர்வலமாக எல் கோவில்பாளையம் விநாயகர் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, கழுதைகளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின், மீண்டும் ஊர்வலமாக லக்கேபாளையம் கொண்டு வரப்பட்டது.


இத்திருமணத்திற்கு மொய் எழுதப்பட்டது. அதன்மூலம் 12 ஆயிரத்து 400 ரூபாய் வசூலானது. கலந்துகொண்ட பொதுமக்களுக்கு கம்பங்கூழ், நீர் மோர் மற்றும் டீ வழங்கப்பட்டது. இதில், அக்கரை செங்கப்பள்ளி, லக்கேபாளையம், எல்.கோவில்பாளையம் கிராம மக்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து ஊர் பெரியவர் சீனிவாசன் கூறுகையில், “1984ம் ஆண்டு இதேபோல் கடுமையான வறட்சி நிலவியது. அப்போது கழுதைகளுக்கு நாங்கள் திருமணம் செய்து வைத்தோம். அடுத்தநாள் முதல், மூன்று மாதங்களுக்கு விட்டுவிட்டு மழை பெய்தது. அனைத்து குளங்களும் நிரம்பின. இப்போது குடிக்கக்கூட தண்ணீர் இல்லை. எனவே, 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்தோம்” என்றார்.