ஜனாதிபதி மஹிந்தவின் உருவ பொம்மை, இலங்கை தேசியக் கொடி எதிர்த்த 500 பேர் கைது..

399

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டனில் இராணுவ முகாமிற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேருக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிங்டனில் இராணுவ முகாமில் கடந்த 27-ஆம் திகதி முதல் இலங்கையை சேர்ந்த இராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் தசநாயகே, மேஜர் ஹரிச்சந்திரா ஆகிய 2 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதமும் எழுதினார். வெலிங்டன் இராணுவ முகாமில் இருந்து இலங்கை இராணுவ அதிகாரிகளை உடனே வெளியேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகியவையும் இலங்கை வீரர்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிப்பதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த கட்சியை சேர்ந்தவர்கள் இராணுவ முகாம் முன்பு கடந்த வாரம் போராட்டம் நடத்தினார்கள்.

இன்று மீண்டும் வெலிங்டன் இராணுவ முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று அரசியல் கட்சியினரும், தமிழ் அமைப்பினரும் அறிவித்தனர். இதனால் ராணுவ முகாம் எல்லை பகுதியில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்கள் இன்று காலை முதல் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இராணுவ முகாமுக்கு முன்பாக தடுப்பு வேலிகள், கயிறுகள் அமைக்கப்பட்டிருந்தன. இராணுவ முகாம் வழியாக செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. குன்னூர் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொலிஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் மதியம் 12 மணி அளவில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதிதமிழர் விடுதலை முன்னணி, தலித் விடுதலை கட்சி, தமிழ் தேசிய இயக்கம், தமிழ் புரட்சி கட்சி உள்ளிட்ட பல கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், வணிகர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் வெலிங்டன் இராணுவ முகாமை முற்றுகையிட்டனர்.

வக்கீல்கள், கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்கள் இலங்கை இராணுவ அதிகாரிகளை உடனே வெளியேற்று என்று கோஷ மிட்டனர். கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் இருந்து வந்த ஏராளமானோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டக்காரர்கள் சிலர் இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவின் உருவ பொம்மையை எரித்தனர். இலங்கை கொடியும் எரிக்கப்பட்டது. போராட்டக்காரர்கள் இராணுவ முகாமுக்குள் நுழைய முயன்றனர்.

அவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தினர். இதனால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. திடீரென வெலிங்டன் இராணுவ முகாம் முன்பு வீதியில் அமர்ந்து போராட்டக்காரர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் ஊட்டி-குன்னூர் சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர், தமிழ் அமைப்பினர் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோரை பொலிஸார் கைது செய்தனர்.