பிச்சை எடுத்த சிறுவன் : என்னைக் கூப்பிட அம்மா வரலையா என தாயின் அன்பிற்காக ஏங்கி நிற்கும் பரிதாபம்!!

322

பிச்சை எடுத்த சிறுவன்

தமிழகத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நான்கு குழந்தைகளை குழந்தைகள் நலக் குழு மீட்டு, அதில் மூன்று குழந்தைகளை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ஒரு சிறுவன் மட்டும் என் அம்மா இன்னும் என்னை கூப்பிட வரவில்லையா என்று ஏகத்துடன் இருப்பது பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.

கரூர் இரயில் நிலையத்தில் பரிதாபமாக பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நான்கு குழந்தைகளை குழந்தைகள் நலக் குழு கடந்த 6 மாதங்களுக்கு முன் மீட்டு, அவர்களை பாதுகாப்பாக வைத்திருந்தனர்.

அவர்களிடம் விசாரித்த போது, அவர்கள் எங்கள் ஊர் தஞ்சாவூர் என்று மட்டுமே கூறியதால், குழந்தைகள் உடனடியாக தஞ்சாவூரில் உள்ள குழந்தைகள் நலக் குழுவில் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்கள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் பயனாக, அதில் மூன்று குழந்தைகள் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதில் 5 வயது தருணின் பெற்றோரை மட்டும் அடையாளம் காண முடியவில்லை, அவர் தன் பெற்றோரி அன்புக்காக ஏங்கி தவிப்பதாக குழந்தைகள் நலக் குழுவின் தஞ்சை மாவட்ட தலைவர் திலகவதி கூறியுள்ளார்.

மதுரை விளாச்சேரியினைச் சேர்ந்த பரமேஸ்வரி என்ற 29 வயதான பெண் ஒருவர் தன் குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தன்னுடைய மூன்று குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அதன் பின்னர் பொள்ளாச்சி, திருப்பூர் போன்ற ஊர்களில் பிச்சை எடுத்து வந்துள்ளார். கடைசியாக கரூர் இரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோது அவரிடம் நான்கு குழந்தைகள் இருந்துள்ளன.

இதனால் குழந்தைகள் உதவி அமைப்பினர் அவர்களை மீட்டு குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைத்தனர். பரமேஷ்வரி குழந்தைகளை கேட்டதால், அவரிடம் உரிய ஆவணங்களை காண்பித்துவிட்டு, குழந்தைகளை அழைத்துச் செல் என்று கூறினோம், ஆனால் அதன் பின் அவர் வரவேயில்லை.

இதையடுத்து அந்த குழந்தைகளிடம் தொடர்ந்து பேசி வந்த போது, பிரித்திவிராஜ் என்ற சிறுவன் நாங்க மதுரை என்றும் படித்த பள்ளி மற்றும் ஆசிரியரின் பெயர்களையும் கூறினான்.

அதன் பின் விசாரித்து, அவர்களின் தந்தையையும் கண்டுபிடித்து வரவழைத்தோம். அப்போது அப்பாவை கண்டவுடன் மூன்று குழந்தைகளும் அவரை கட்டிப்பிடித்துக் கொண்டன. ஆனால் தர்ஷன் மட்டும் தனிமரமாக நின்றான், அப்போது அவன் என்னை அழைப்பதற்கு எங்க அம்மா வரலையா என்று கண்கலங்கிவிட்டான்.

அவனை சமாதானப்படுத்தி, நிச்சயமாக உன்னை உன் அம்மாவிடம் சேர்ப்போம் என்று உறுதியளித்துள்ளோம். ஒவ்வொரு நாளும் நன்றாக இருக்கும் அவன், திடீரென்று தன் அம்மா-அப்பாவை நினைத்து சோர்வாகிவிடுவான், பாசத்திற்காக ஏங்கி நிற்கிறான் என்று சற்று வேதனையுடனே கூறி முடித்தார்.

மேலும் தர்ஷனை எங்கிருந்து வந்தான் என்பதை அந்த பரமேஷ்வரி என்ற பெண் சொன்னால் மட்டுமே தான் கொஞ்சமாகவது உதவ முடியும் என்று கூறியுள்ளார்.