அறவழியில் போராடி முதல் வெற்றி கண்ட அன்னா ஹசாரே!!

312

Annaவெள்ளையனின் பிடியில் சிக்கித் தவித்த இந்தியா 1947ம் ஆண்டு விடுதலை பெற்றபோது தனக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் சுதந்திர தின கொண்டாட்டங்களில் கூட கலந்து கொள்ளாது மேற்கு வங்கத்தில் நடைபெற்ற இனக்கலவரத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் அங்கு சென்று உண்ணாவிரதம் இருந்தவர் அண்ணல் காந்தியடிகள்.

இவரின் சாயலாய் அமைதியின் தூதராய் அறவழியில் காரியங்களை சாதிக்கும் வலிமை உடையவராய் அன்னா ஹசாரே (76) கிசன் பபட் பாபுராவ் ஹசாரே என்ற இயற்பெயருடைய இவர், மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகர் அருகில் உள்ள ராலேகான் சித்தியில் பிறந்தவர்.

இளம் வயதில் வறுமை காரணமாக தன் பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காத இவர் ராணுவத்தில் சேர்ந்து தேசத் தொண்டாற்ற எண்ணினார்.

இந்திய ராணுவத்தில் சாரதியாக பணியில் சேர்ந்து 1965ம் ஆண்டு, பாகிஸ்தானுடனான போரில் சிப்பாயாக போர்க்களத்தில் சண்டையிட்ட இவர் இரு முறை எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து உயிர் தப்பினார்.

திருமணம் புரியாமல் 12 ஆண்டுகள் ராணுவ சேவை ஆற்றிய இவர் ஓய்வுப் பலன் நிதியை சொந்த கிராம முன்னேற்றத்திற்காக செலவிட்டார். ராணுவத்தில் பணியாற்றிய அனுபவம் தலைமைப் பணியை ஏற்பதில் இவருக்கு கை கொடுத்தது.

இவரது தலைமையில் கிராமத்தை சுத்தம் செய்தல், மழை நீர் சேகரிப்பு, மக்கள் தொகை கட்டுப்பாடு, கல்வியின் அவசியம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினார். இதன் மூலம் உறங்கிக் கொண்டிருந்த கிராம மக்களை தட்டி எழுப்பினார்.

இவரின் சேவையால் மின்னிய ராலேகான் கிராமம், மத்திய அரசின் சார்பில் முன் மாதிரி கிராமமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இவரின் அரிய சாதனைகள், பத்திரிகைகளில் வெளிவரத் துவங்கின. அன்னாவின் சாதனையை பாராட்டி, மத்திய அரசு அவருக்கு பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி கவுரவித்தது.

தன் சொந்த கிராமத்துடன் தனது சேவை முடங்கிவிடக் கூடாது என எண்ணிய அன்னா ஹசாரே நாட்டில் ஊழலின் தாக்கத்தால் பலரும் பாதிக்கப்படுவது கண்டு மனம் வெதும்பினார். ஊழலுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களை நடத்தினார்.

இதற்கு நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்ததால் மத்திய அரசின் கவனம் இவர் பக்கம் திரும்பியது. ஊழலை எதிர்த்த போரில் இறங்கினார். இவரின் தொடர் அறப்போராட்டங்களால் வேறு வழியின்றி மத்திய அரசு சில திருத்தங்களுடன் லோக்பால் மசோதாவை சமீபத்தில் நிறைவேற்றியுள்ளது.

எனினும் வலுவான லோக்பால் நிறைவேறும் வரை தனது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என அன்னா அறிவித்துள்ளார். இவரின் பிரதான சீடனான அரவிந்த் கெஜ்ரிவால் டில்லியில் 15 ஆண்டுகளாக ஆட்சிக் கட்டிலில் இருந்த ஷீலா தீட்சித் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து முதல்வராகி விட்டார். இது அன்னா முயற்சிக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.