இந்த உலகிற்கு மோசமான பெண்கள் அதிகம் தேவை : பிரபல நடிகை அதிரடி!!

19


பிரபல நடிகை


தங்கள் உரிமையை விட்டுக்கொடுக்காத பெண்கள் மோசமானவர்கள் என்றால், அவர்கள் தான் இந்த உலகிற்கு அதிகம் தேவைப்படுகிறார்கள் என்று பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தெரிவித்துள்ளார்.ஹாலிவுட்டின் பிரபல நடிகையான ஏஞ்சலினா ஜோலி(44), சமீப காலமாக வீடு முதல் அலுவலகம் வரை பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கு எதிராக போராடி வருகிறார். இதற்கு முன்பு, மனித உரிமை மீறல்கள் குறித்து விவாதம் செய்யும் நல்லெண்ண தூதராக பணியாற்றியுள்ள ஏஞ்சலினா, தற்போது சிறப்பு தூதராக செயல்பட்டு வருகிறார்.


ஏஞ்சலினா ஜோலிக்கு மூன்று மகள்கள், மூன்று மகன்கள் உள்ளனர். இவர்களில் இரண்டு மகன்களும், ஒரு மகளும் தத்தெடுக்கப்பட்டவர்கள். எனினும், இன பாகுபாடு இன்றி தனது பிள்ளைகளை ஏஞ்சலினா வளர்த்து வருகிறார். இந்நிலையில், பிரபல ஆங்கில பத்திரிகையான Elleயின் செப்டம்பர் மாத இதழுக்காக கட்டுரை ஒன்றை ஏஞ்சலினா எழுதியுள்ளார்.


இதில் தன் மூன்று மகள்களுக்காக உருக்கமான தன்னம்பிக்கை தரும் விடயங்கள் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பெண்கள் குறித்து புரட்சிகரமான கருத்துக்களையும் அதில் தெரிவித்துள்ளார். அந்த கட்டுரையில்,

‘சமுதாயத்திற்கு எதிராக போராடும் பெண்கள் ஆபத்தானவர்கள் என்று பொதுவாக கருதப்படுகிறது. அந்த காலத்தில் இருந்தே, சமுதாயத்திற்கு சாதாரணமாக கருதப்படும் செயல்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் பெண்களை, இயற்கைக்கு மாறானவர்கள் அல்லது வித்தியாசமானவர்கள், மிகவும் ஆபத்தானவர்கள் என்று முத்திரை குத்திவிடுகிறார்கள்.

அறிவை கூர்மைபடுத்துவது தான் உங்கள் வாழ்வில், நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான விடயம் என்று என் மகள்களுக்கு நான் அடிக்கடி கூறுவேன். நீங்கள் எவ்வளவு அழகான உடையை வேண்டுமானாலும் அணிந்துகொள்ளலாம். ஆனால், உங்கள் மனம் வலுவாக இல்லாவிட்டால் நீங்கள் அணியும் உடை ஓர் பொருட்டே அல்ல.

ஒரு பெண்ணுக்கு சுயமான விருப்பம் மற்றும் அவளுக்கென்று சொந்த கருத்துக்கள் இருப்பதை விட வேறெதுவும் பெரிதல்ல. இதை விட பிறரை வசியம் செய்யும் பண்பு வேறெதுவும் இல்லை. குடும்பத்தால் நிராகரிக்கப்பட்ட அல்லது வேறு எந்த கடுமையான காரணத்திற்காகவும், தனக்கான உரிமைக் குரலை விட்டுக்கொடுக்காத பெண்களே மிகவும் பலசாலிகள்.

இவர்களுக்கு பெயர் மோசமானவர்கள் என்றால், இந்த உலகிற்கு மோசமான பெண்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள். இப்படிப்பட்ட மோசமான பெண்கள் பெரும்பாலும், சமூக அநீதி மற்றும் துன்புறுத்தல்களை எதிர்த்துப் போராடி சோர்ந்துபோனவர்கள்’ என தெரிவித்துள்ளார்.