வெற்றி யாருக்கு : பரபரப்பான கட்டத்தில் இந்திய – தென் ஆபிரிக்க டெஸ்ட்!!

740

South-Africa

இந்தியா, தென் ஆபிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது.

முதல் இன்னிங்சில் இந்தியா 334 ஓட்டங்களை எடுத்து ஆட்டம் இழந்தது. இதனை தொடர்ந்து ஆடத்தொடங்கிய தென் ஆபிரிக்கா மூன்றாம் ஆட்ட நேர இறுதியில் 5 விக்கெட் இழப்பிற்கு 295 ஓட்டங்களை எடுத்திருந்தது. இதனைதொடர்ந்து போட்டியின் நான்காம் நாளான நேற்று தென் ஆப்பிரிக்கா அணி சிறப்பாக ஆடியது.

சிறப்பாக ஆடிய கலிஸ் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்துள்ளார். 115 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்து வெளியேறியபோது ரசிகர்கள் எழுந்து நின்று அவரை உற்சாக வழியனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தென் ஆபிரிக்கா அணி 8 விக்கெட் இழப்பிற்கு 497 ஓட்டங்களை எடுத்திருந்தபோது மழைக்காரணமாக ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் ஆடிய தென் ஆபிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 500 ஓட்டங்களை அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அந்த அணியின் கலிஸ் 115 ஓட்டங்களும், ஏபி டி வில்லியர்ஸ் 74 ஓட்டங்களும், பீட்டர்சன் 62 ஓட்டங்களும், ரொபின் பீட்டர்சன் 61 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் ரவீந்தர ஜடேஜா 6 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் தென் ஆபிரிக்கா அணி 166 ரன்கள் முன்னிலை பெற்றது.

தனது இரண்டாவது இனிங்சிற்காக களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான முரளி விஜய் ஆறு ஓட்டங்களுடன் ஏமாற்றினார். ஷிகர் தவான் 19 ஓட்டங்களுடன் மீண்டும் சொதப்பினார். இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 68 ஓட்டங்களை எடுத்திருந்த போது, போதிய வெளிச்சமின்மை காரணமாக நான்காம் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

புஜாரா 32 ஓட்டங்களுடனும் விராட் கோலி 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். தென் ஆபிரிக்கா சார்பில் பிலாண்டர், ரொபின் பீட்டர்சன் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இன்று கடைசி நாள் ஆட்டம் என்பதால், இந்திய துடுப்பாட்ட வீரர்கள் மிகுந்த கவனமுடன் தென் ஆபிரிக்க வேகப்பந்துவீச்சை சமாளிக்க வேண்டும். ஒருவேளை இந்திய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்கும் பட்சத்தில், தென் ஆபிரிக்க அணிக்கு சுலப இலக்கை நிர்ணயித்து தொடரை இழக்க நேரிடலாம்.