காஷ்மீரில் நிலவும் தொடர் பதற்றம் : பால் கூட இல்லாமல் கதறி அழும் பிஞ்சுக்குழந்தைகள்!!

335

கதறி அழும் பிஞ்சுக்குழந்தைகள்

காஷ்மீர் மாநிலத்தில் இந்திய இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கிருக்கும் மக்கள் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு கூட மிகுந்த சிரமப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டதிலிருந்தே பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. அதோடு அல்லாமல் அதிகளவிலான இந்திய இராணுவத்தினர் குவிக்கப்பட்டு, தொலைக்காட்சி, இணையதள இணைப்புகள் துண்டிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும், பெரும்பாலான கடைகளும் மூடப்பட்டிருப்பதால் அங்கிருக்கும் மக்கள், பசியால் கதறி அழும் பிஞ்சுக்குழந்தைக்கு பால் முதற்கொண்டு, அத்தியாவசிய பொருட்களான மாத்திரைகள், சமைப்பதற்கான உணவுப்பொருட்கள் ஆகியவை வாங்க முடியாமல் பெரும் அவஸ்தையடைவதாக ‘நியூயார்க் டைம்ஸ்’பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.

பத்திரிக்கை வெளியிட்டுள்ள தகவலின்படி, காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வெள்ளிக்கிழமை பிற்பகல், பல்லாயிரக்கணக்கான மக்கள் அமைதியான வழியில் தலைநகர் ஸ்ரீநகரில் போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர்.

சுதந்திர முழக்கங்களை எழுப்பி, காஷ்மீர் கொடிகளை அசைத்துகொண்டிருத்துள்ளனர். அப்போது திடீரென இந்திய இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்த ஆரம்பித்ததாக நேரில் பார்த்த ஒருவர் கூறியுள்ளார்.

இதனையடுத்து அங்கு குவிந்திருந்த மக்கள் கூட்டம் நாலாபுறமும் சிதறி ஓட ஆரம்பித்தனர். இதில் குறைந்தது 7 பேர் காயமடைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் பெல்லட் குண்டு தாக்குதலால் அதிகமானோருக்கு கண்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அஃப்ஷனா ஃபாரூக் என்ற 14 வயது சிறுமி கிட்டத்தட்ட நெரிசலில் சிக்கி மிதிக்கப்பட்டார் என கூறியுள்ளதாக பத்திரிக்கை நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.