ரஜினிகாந்த் முதலில் நல்ல மனிதராக இருக்க வேண்டும் : சீமான் ஆவேசம்!!

275

சீமான் ஆவேசம்

நடிகர் ரஜினிகாந்த் முதலில் நல்ல மனிதராக இருக்க வேண்டும், அதன் பின் நல்ல தலைவராக இருக்க வேண்டும் என நாம் தமிழர் சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார். பா.ஜ.க கட்சி தலைவர் அமித்ஷாவும், பிரதமர் மோடி இருவரும் கிருஷ்ணர்-அர்ஜூனன் போன்றவர்கள் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார். அத்துடன் காஷ்மீர் விவகாரத்தை அமித்ஷா திறம்பட கையாண்டதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் திருநெல்வேலியில் செய்தியாளர்களை சந்தித்தபோது, நடிகர் ரஜினிகாந்த் குறித்தும் காஷ்மீர் விவகாரம் குறித்தும் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. அங்கு கல்வி, வேலை வாய்ப்பு இல்லை. உட்கட்டமைப்பு வசதியில்லை.

அங்குள்ள மக்களின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்காக சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதாக கூறுகிறார்கள். 433 சட்டசபை உறுப்பினர்களை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தை இரண்டாக ஏன் பிரிக்கவில்லை? மத்திய அரசு இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என கூறுகிறது. அப்படியென்றால் முத்தலாக் சட்டத்தை ஏன் நிறைவேற்றினார்கள்? அதிகாரம் படைத்தவர்கள் கூறும்போது, அடிமைகள் கை கட்டி கேட்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

பாரதிய ஜனதா கட்சி தலைவர் அமித்ஷாவும், பிரதமர் நரேந்திர மோடியும் கிருஷ்ணர், அர்ஜூனன் போன்றவர்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். இது அவருடைய சொந்த கருத்து. முதலில் அவர் நல்ல மனிதராகவும், நல்ல தலைவராகவும் இருக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.