பீதியை கிளப்பும் ரஷ்யாவின் Doomsday ஏவுகணை : அபாயத்தில் உறைந்துபோயுள்ள உலக நாடுகள்!!

441

Doomsday ஏவுகணை

ரஷ்யாவில் சமீபத்தில் சோதனை முயற்சியில் வெடித்துச் சிதறிய doomsday ஏவுகணை தொடர்பில் பதற வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள செவரோட்வின்ஸ்க் என்ற நகரத்தில் இருந்து சோதனை மேற்கொள்ளப்பட்ட Burevestnik எனப்படும் doomsday ஏவுகணை முதல் முயற்சியிலேயே வெடித்துச் சிதறியுள்ளது.

இதனால் அந்த பகுதி முழுவதும் அணு கதிர்வீச்சு ஏற்பட்டது. மட்டுமின்றி நேரம் செல்லச் செல்ல அதன் தாக்கம் அதிகரித்து, சாதாரண நிலையை விட சுமார் 16 மடங்கு கூடுதலாக காணப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் தரப்பில் இருந்து, அணுக்கதிர்வீச்சின் தாக்கத்தை அயோடின் ஓரளவு கட்டுப்படுத்தும் என்பதால் அயோடின் மருந்தை வாங்கி சாப்பிடுமாறு அறிவிக்கப்பட்டது .

சிறிது நேரத்தில் மருந்து கடைகளிலும் மருத்துவமனைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. வெறும் ஏவுகணை வெடித்ததால் கதிர்வீச்சு ஏற்படுமா? அணு ஆயுதத்துடன் ஏவுகணை வெடித்து சிதறியதால் கதிர்வீச்சு ஏற்பட்டதா போன்ற கேள்விகள் உலக நாடுகளிடையே எழத் தொடங்கின.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ரஷ்ய நாடாளுமன்றத்தில் ஜனாதிப்தி விளாடிமீர் புடின் ஆற்றிய உரையில், இதுவரை இல்லாத புதிய வகை ஏவுகணைகள் தயாரிப்பில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து இருந்ததை சுட்டிக்காட்டி சர்வதேச ஊடகங்கள், அந்த doomsday ஏவுகணை தொடர்பில் பகீர் கிளப்பும் பின்னணி தகவல்களை வெளியிட்டுள்ளது.

ரஷ்ய ஜனாதிபதி குறிப்பிட்ட இதுவரை இல்லாத புதிய வகை என்பது ஏவுகணைகளுக்கான எரிபொருளாகவே அணுசக்தியை பயன்படுத்துவதுதான். தற்போது எரிபொருளாகவே அணுசக்தியை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தில் ரஷ்யா இறங்கியுள்ளது.

இதன் நோக்கம் தொலை தூரத்தில் உள்ள இலக்கையும் குறிவைத்து தாக்கி அழிக்கலாம் என்பதுதான். இந்த ஏவுகணை சோதனை வெற்றி பெற்றால், அது, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும்.

அணு ஏவுகணை தாக்குதல் நடந்தால் கதிர்வீச்சு கட்டாயம் இருக்கும். ஏவப்பட்ட வினாடியில் இருந்து பாதிப்பு தொடங்கிவிடும். வருங்காலத்தில் ஏவுகணைகள் சுமந்து வருவது மட்டும் அணு ஆயுதமாக இருக்காது. ஏவுகணைகளே அணு ஆயுதமாக இருக்கும்.

இதில் ஆர்டிஜி எனப்படும் மிகச்சிறிய வகை அணுசக்தி ராக்கெட்டுகள் பயன்படுத்தப்படும். இதில் அணுக்கழிவுகள் வெளியேறுவது இல்லை. ராக்கெட்களில் பயன்படுத்தப்படும் ஆர்டிஜி தொழில்நுட்பத்தில் அணுவை பிளப்பதோ, இணைப்பதோ இல்லை.

ஆனால், ஏவுகணைகளை செலுத்த ஆர்டிஜி தொழில்நுட்பம் போதாது, மிகப்பெரிய அளவிலான அணுசக்தி பூஸ்டர்கள் தேவைப்படும். இங்கேதான் அணு கதிர்வீச்சு கொண்ட கழிவுகள் வெளியேறுகின்றன. இந்த வகை ஏவுகணைகளை எதிரி நாட்டின் மீது ஒன்றை ஏவினால் போதும், பல கி.மீ. தூரம் பஸ்பமாகி விடும்.


அங்கு புல், பூண்டு கூட இருக்காது. திரும்பவும் முளைக்க பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இதனிடையே புதிய ஏவுகணை சோதனை தொடர்பில் விளக்கமளித்த ரஷ்யா, திரவ எரிபொருள் ஏற்றப்பட்ட ஒரு ஏவுகணை திடீரென வெடித்தது. இந்த விபத்தில் 5 பொறியாளர்கள் இறந்துள்ளனர் என ஒப்புக்கொண்டுள்ளது. மட்டுமின்றி கதிர்வீச்சு கட்டுப்பாட்டு மையம் பதிவு செய்த கதிர்வீச்சு 4 முதல் 16 என்ற அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.