வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராட்டம்!!

371

போராட்டம்

வவுனியா வடக்கு பிரதேச செயலாளரை இடமாற்றக் கோரி வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று (21.08.2019) காலை 10 மணியளவில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மக்களினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் நியமன காலத்திலிருந்து இன்று வரை 16 ஆண்டு காலமாக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றி வருகின்றார். அந்த வகையில் பொதுமக்களிடம் இருந்து பல முறைப்பாடுகள் அரசாங்க அதிபர் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்ட போதிலும் இதுவரையும் எந்தவொரு நடவடிக்கையோ விசாரணைகளோ முன்னெடுக்கப்பட்டு தீர்வு வழங்கப்படவில்லை,

எனவே காலம் தாழ்த்தாது விரைவாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளரை இப் பிரதேச செயலக பிரிவிலிருந்து வேறு பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் செய்யுமாறும் இவர் தொடர்பிலான முறைகேடுகளையும் உரியமுறையில் நேர்மையாகவும் நீதியாகவும் விசாரணை செய்யுமாறும் தெரிவித்தும்,

பரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள வயல்காணி பிரித்து வழங்குதலில் முறைகேடு இடம்பெற்றுதாகவும் தெரிவித்து குறித்த போராட்டம் இடம்பெற்றிருந்தது.

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் அரசே வவுனியா வடக்கு பிரதேச செயலாளரை இடமாற்றம் செய், எமக்காக குளத்தினை கட்டி பருந்துகளிடம் கொடுத்தது யார்? ஏழைகளின் வயிற்றில் அடிக்காதீர்கள் , 15 வருடகாலம் வவுனியா வடக்கு மக்களுக்கு வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் செய்த அநீதி போதும்,

சஞ்சீவிக் காட்டுக்கு யார் காணி உறுதி கொடுத்தது போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்திவாறு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டகாரர்கள் வவுனியா மாவட்ட செயலக வாசலிருந்து பேரணியாக வவுனியா மாவட்ட செயலகத்தின் அரசாங்க அலுவலகத்தினை சென்றடைந்து வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா அவர்களிடம் பல்வேறு கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜரினையும் கையளித்தனர். அரசாங்க அதிபருக்கு வழங்கப்பட்ட மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஒர் அரச உத்தியோகத்தரின் கடமைக்காலம் 5வருட காலமாகும் ஆனால் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் 16 ஆண்டு காலமாக இப்பிரதேச செயலகத்தில் கடமையாற்றுக்கின்றார்.

அரசினால் வழங்கப்பட்ட நிரந்தர வீட்டுத்திட்டத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை புறம்தள்ளி முறையற்ற விதத்தில் வெளிமாவட்டத்தினை சேர்ந்தவர்களுக்கும் வெளிநாட்டினை சேர்ந்தவர்களுக்கும் வழங்கி வருதல், புளியங்குளம், கனகராயன்குளம் ஏ9 வீதியில் உள்ள அரசகாணிகளை முறையற்ற விதத்தில் குத்தகை அடிப்படையிலும் குடியிருப்பு காணிகளாவும் வழங்குதல்,

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவு காட்டுப்பகுதியில் முறையற்ற விதத்தில் கிரவல் அகழ்விற்கு அனுமதி வழங்குதல், வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் கட்டுமான பணிகளுக்கான மணல் அகழ்விற்கான அனுமதியினை குறைத்து முகவர்கள் ஊடாக வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்தல், வவுனியா வடக்கு பிரதேசத்தில் கால்நடைகளை ஒரு நபர் ஊடாக ஒப்பந்த அடிப்படையில் கொள்ளவனவு செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கல்,

வீட்டுதிட்டம் என்ற பெயரில் காடுகளை அழித்து பயனாளிகளை பயன்படுத்தி விறகு விற்பனையில் ஈடுபடுதல், பிரதேச செயலாளரின் ஊழல் மோசடிகளுக்கு துணைபுரியும் அரச ஊழியர்களுக்கு காணி வீடு வழங்குதல், துணைபோகாத ஊழியர்களை பழிவாங்குதலும் வெளியேற்றலும் என்று பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் மீது வவுனியா வடக்கு மக்களினால் முன்வைக்கப்பட்டுள்ளதுடன்,

மேற்குறிப்பிட்ட காரணங்களின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்து வவுனியா வடக்கு பிரிவுக்கு புதிய பிரதேச செயலாளரை நியமிக்குமாறு குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.