கிளிநொச்சி திருமண வீட்டில் இப்படி ஒரு நிலை!!

341


திருமண நிகழ்வில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பணத்தை கொள்ளையிட்ட விவகாரத்தில் கைதான நபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.



கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள நண்பர்கள் விருந்தினர் விடுதியில் கடந்த யூன் மாதம் 05ஆம் திகதி நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பெருந்தொகை பணத்தை கொள்ளையிட்ட வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றபோது, இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

பணம் கொள்ளையிடப்பட்டது தொடர்பில், யூன் மாதம் 09ஆம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.



விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சிப் பொலிஸார் விடுதியில் பொருத்தப்பட்ட சீ.சீ.ரீ.வி கமரா பதிவுகளை பார்வையிட்டு சந்தேக நபர் ஒருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.



சந்தேக நபரை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, குறித்த சந்தேக நபர் நேற்று (21) வரையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.


சந்தேக நபரை நேற்று (21) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதிவான் ரீ. சரவனராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தியதுடன் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிசார் சந்தேக நபரின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி மேலும் இரண்டு பேரைக் கைது செய்ய வேண்டியுள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து சந்தேக நபரை எதிர் வரும் 04ஆம் திகதி வரையும் மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளையிட்டுள்ளது.


முறைப்பாட்டாளர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட பலரைக் கைது செய்ய வேண்டியுள்ளதாக பொலிசார் தெரிவித்தாலும் சந்தேக நபருக்கு சார்பாகவே செயற்படுவதாகவும் உரிய முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என்றும் குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி மன்றில் ஆஜராகவில்லை எனவும் கடந்த தவணையில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக கிளிநொச்சி உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.