வவுனியா பண்டார வன்னியன் நிகழ்வில் இருந்து வெளியேறிய சாந்தி எம்.பி!!

12


வன்னியன் நிகழ்வில் இருந்து வெளியேறிய சாந்தி எம்.பி


வவுனியா நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் பண்டார வன்னியனின் 216 ஆவது நினைவு தின நிகழ்வில் இருந்து பாராளுமன்ற மன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா வெளிநடப்பு செய்ததுடன், இது ஈபிஆர்எல்எப் கட்சி நிகழ்வா எனவும் விசனம் வெளியிட்டுள்ளார்.வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் தலைவர் இ.கௌதமன் தலைமையில் இன்று (25.08.2019) காலையில் பண்டார வன்னியனின் நினைவுச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது. தொடர்ந்து நகரசபை மண்டபத்தில் அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றன.


இந்நிகழ்வின் ஆரம்பத்தில் பண்டார வன்னியனின் கொடியினை பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஏற்றி வைத்திருந்தார். அதனை தொடர்ந்து நிகழ்வுகள் இடம்பெற்ற போது ஈபிஆர்எல்எப் கட்சியின் செலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் உரையாற்றியிருந்தார்.


நீண்டநேரமாக விருந்தினர் வரிசையில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா அமர்ந்திருந்த போதும் அவருக்கு உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்டபடவில்லை.

அதனைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர் செந்தில்ரூபனை அழைத்து தனக்கு உரையாற்ற 5 நிமிடம் வழங்குமாறு சாந்தி சிறிஸ்கந்தராஜா கோரியிருந்தார். அவர் நகரசபைத் தலைவர் இ.கௌதமனிடம் கோரிய போதும் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இதனை குறித்த உறுப்பினர் எம்.பியிடம் தெரிவித்ததையடுத்து, இது பண்டாரவன்னியன் நிகழ்வா? அல்லது ஈபிஆர்எல்எப் கட்சி நிகழ்வா என கேள்வி எழுப்பியபடி மண்டபத்தில் இருந்து வெளியேறிருந்தார்.

இதன்பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், இன்றைய நிகழ்வு மிகவும் மதிக்கக் கூடிய ஒரு நிகழ்வு. பண்டார வன்னியனின் 216 ஆவது இந்த நிகழ்வை மிகவும் கோலகலமாக கொண்டாடியதையிட்டு மகிழ்வடைக்கின்றேன்.

நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பதற்கு அப்பால் நான் ஒரு வன்னியாள். அந்த வன்னி மண்ணைச் சேர்ந்தவள். அந்த மண்ணில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவள் என்ற உணர்வுடன் இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தேன்.

ஆனாலும் பண்டார வன்னியனின் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் நகரசபையில் இடம்பெற்ற நிகழ்வு ஒரு கட்சி சார்ந்த நிகழ்வு ஆக போய்விட்டதோ என்ற வேதனையை நான் உணர்கின்றேன். இந்த நிகழ்வில் சக பாராளுமன்ற உறுப்பினருக்கு உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் கொடுத்த அதேவேளை, பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் எனக்கும் எனது கருத்தை சொல்வதற்கான கருத்துச் சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது.

இதனால் வன்னி மண்ணை காத்த வீரன் பண்டார வன்னியன் நிகழ்வு ஒரு கட்சி சார்ந்த நிகழ்வாக மாறிவிட்டதோ என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. காட்டிக்கொடுப்புக்களால் தான் அன்று பண்டார வன்னியன் தோ ற்கடிக்கப்பட்டான். எங்களுடைய ஆ யுதப் போ ராட்டம் காட்டிக் கொடுப்பால் தான் தோற்கடிக்கப்பட்டது.

இன்று நடந்த வரவேற்பு நிகழ்வு சிங்கள தேசத்திற்கு நாம் தமிழ், சிங்களம் என்ற ஒற்றுமையுடன் வாழத்தயார் என்ற ஒரு செய்தியை சொல்கிறது. ஒரே நாட்டிற்குள் எங்களுக்குரிய சுதந்திரத்துடன் நாங்கள் ஒற்றுமையாக வாழ தாயராக இருக்கின்றோம்.

ஆனால் அதை தர சிங்களதேசம் தயாராகவில்லை என்பதை அந்த நிகழ்வு சொல்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருமித்த நாட்டிற்குள் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழக் கூடிய நிலையை உருவாக்க சம்மந்தன் ஐயா தலைமையில் முயன்று கொண்டிருக்கையில் காட்டிக்கொடுப்புக்களால் தோற்கடிக்கப்படுகின்றோம்.

மீண்டும் காட்டிக் கொடுப்புக்களால் எங்களது பிரச்சனை நீண்டு செல்கின்றது என்ற வேதனையையும் கூற விரும்புகின்றேன் எனத் தெரிவித்தார்.