மனோவும் கூட்டமைப்பும் நாணயத்தின் இரு பக்கங்கள் : தேசிய சுதந்திர முன்னணி!!

462

national_freedom_frontவடக்கு கிழக்கில் தமிழீழ அரசை தோற்றுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பிரிவினைவாத கொள்கைகளை வலுப்படுத்த மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் அவர் இதனை கூறினர். அவர் மேலும் கூறுகையில்..

தமிழீழத்தை உருவாக்கும் நோக்கில் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனோ கணேசனுடன் இணைந்து கொழும்பில் போட்டியிட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மனோ கணேசனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. இவர்கள் பிரிவினைவாத்திற்கு குரல் கொடுத்து அதற்கு உதவியளித்து வருபவர்கள்.

கொள்கை அடிப்படையிலும் இந்த கட்சிகளுக்கு இடையில் எந்த வேறுபாடுகளும் கிடையாது. இந்த கட்சிகள் பிரிவினைவாதத்திற்கு உதவி செய்யும் விடுதலைப் புலிகளுக்கு சார்பான கட்சிகள்.

மேல் மாகாணத்திலும் பிரிவினைவாதத்தை போஷிப்பதற்காக புலம்பெயர் தமிழர்களின் ஆதரவுடன் மனோ கணேசனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இணைந்துள்ளனர்.

வடக்கில் ஆடிய விளையாட்டை மேல் மாகாணத்திலும் ஆடி மேல் மாகாணத்தில் உள்ள தமிழ் வாக்குகளை ஓரிடத்தில் குவிய செய்து பிரிவினைக்கும் நாட்டை பிரிக்கவும் ஆதரவாக வழங்கிய வாக்குகளாக அந்த வாக்குகளை காட்டும் முயற்சியாகவே இவர்கள் மேல் மாகாணத்தில் களமிறங்குகின்றனர்.

இவர்களின் இந்த சூழ்ச்சியில் சிக்கி கொள்ள வேண்டாம் என சிங்கள,தமிழ், முஸ்லிம் மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார்.