முத்தரப்பு தொடரில் இருந்து சேவாக், கம்பீர், யுவராஜ் நீக்கம்..

494


sehwag-yuvraj-gambhir
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரையடுத்து, மேற்கிந்திய தீவுகளில் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. வரும் 28-ம் திகதி ஆரம்பமாகி ஜூலை 11-ம் திகதி வரை நடைபெற உள்ள இத்தொடரில் இந்தியா, இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் விளையாடுகின்றன.

இத்தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தற்போது சம்பியன்ஸ் கிண்ண தொடரில் இந்தியா சிறப்பாக விளையாடி வருவதால், அதே 15 வீரர்கள் முத்தரப்பு தொடருக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.



இதனால் சேவாக், கம்பீர், யுவராஜ் சிங் மற்றும் ஜாகிர்கான் ஆகிய முன்னணி வீரர்களும் இடம்பெறவில்லை. சேவாக், கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார். அந்த போட்டியில் அவர் மிகவும் மோசமாக விளையாடியதால் தற்போது வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான தொடர் மற்றும் பாகிஸ்தானுடன் ஒரு போட்டியில் யுவராஜூக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதனை அவர் சரியாக பயன்படுத்தாததால் தற்போது ஓரங்கட்டப்பட்டிருக்கிறார். இதேபோல் காயம் அடைந்துள்ள ஜாகீர்கான் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் இருந்து ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை.



21 வீரர்கள் கொண்ட பட்டியலில் இடம்பெற்றிருந்த மூத்த வீரர் கம்பிருக்கு முத்தரப்பு தொடரில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் சம்பியன்ஸ் கிண்ண தொடரில் ஷிகார் தவான்-ரோகித் சர்மா ஜோடி சிறந்த துவக்க வீரர்களாக பிரகாசிப்பதால் காம்பிர் பெயரை பரிசீலிக்கவில்லை.



இந்திய அணி: டோனி, ஷிகார் தவான், முரளி விஜய், ரோகித் சர்மா, விராத் கோலி, தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், இர்பான் பதான், அமித் மிஸ்ரா, வினய் குமார்.