அரசியலமைப்பின் 13வது திருத்தச்சட்டம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சர்வதேச சமூகத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாவிடின் கிழக்கு தீமோர் மற்றும் சூடான் நாடுகளுக்கு ஏற்பட்ட நிலைமை இலங்கைக்கு ஏற்படும் அபாயம் உள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
இனப்பிரச்சினை தீர்வாக அரசாங்கம் 13ம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தினாலோ அல்லது 13வது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்றாலோ அதற்கு முழுமையான ஆதரவினை வழங்குவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தயாராகவுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐ.தே.க வின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்வாறு குறிப்பிட்டார். அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்..
தேசிய பிரச்சினை தீர்வு விடயத்தில் அரசாங்கம் உள்நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினாலே அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.
அதாவது அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதாகவும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதாகவும் அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபைக்கும் சர்வதேசத்துக்கும் வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. அந்த வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றவேண்டியது அவசியமாகும்.
யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் அரசாங்கம் இவ்வாறு சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருக்கின்றது.
உள்நாட்டில் தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை போன்று சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் சர்வதேசம் மறந்துவிடும் என்று அரசாங்கம் கருதக்கூடாது. எத்தனை வருடங்கள் சென்றாலும் சர்வதேசம் வாக்குறுதிகளை மறக்கப்போவதில்லை. கேள்விகளை எழுப்பும்.
எனவே இந்த விடயத்தில் அரசாங்கமும் குழம்பி ஏனைய தரப்புக்களையும் குழப்பியுள்ளது. சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டால் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். தேசிய பிரச்சினை தீர்வு முயற்சிக்கு ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு வழங்கும்.
யுத்தம் முடிந்துவிட்டது. ஆனால் பிரச்சினை இன்னும் தீரவில்லை. பிரச்சினை இருந்ததைவிட தீவிரமடைந்துள்ளது. இவ்வாறே பயணித்தால் நாட்டுக்கு எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகள் ஏற்படலாம்.
இந்தோனேஷியாவுக்கு எதிராக ஒரு காலத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சிறிய குற்றச்சாட்டுக்களே முன்வைக்கப்பட்டன. ஆனால் இறுதியில் கிழக்குத் தீமோர் உருவாகியது.
அதேபோன்று சூடானுக்கு எதிராக ஒரு காலத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் சிறிய குற்றச்சாட்டுக்களே முன்வைக்கப்பட்டன. இறுதியில் தென் சூடான் உருவானது.
தற்போது இலங்கைக்கு எதிராகவும் மனித உரிமைப் பேரவையில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. எனவே பிரச்சினைகளை சர்வதேச சமூகத்துடன் பேசித் தீர்த்துக்கொள்வது அவசியமாகும். இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இந்த நாட்டுக்கு ஜெனிவா மனித உரிமைப் பேரவையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே 1989ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.
எனவே பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.