கொல்கத்தாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவியை குற்றவாளிகளே தீயிட்டு கொளுத்தியதாக பொலிஸார் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளனர்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்ததால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் மீண்டும் மாணவியை பலாத்காரம் செய்தது.
புகாரை திரும்பபெறக் கோரி தொடர்ந்து விரட்டப்பட்டு வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 23ம் திகதி மாணவி தனக்குத்தானே தீ வைத்து தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சிகிச்சை பலனின்றி அவர் டிசம்பர் 31ம் திகதி இரவு உயிரிழந்தார். இது தொடர்பாக மாணவியின் தந்தை மருத்துவமனை நிர்வாகம் மீதும், முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீதும் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் பொலிஸார் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவது பொய் என்று மறுத்துள்ளனர்.
அவர் மீது குற்றவாளிகள் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.





