திருமண நிகழ்வில் நடந்த மோசமான சம்பவம் : சிசிரீவியால் சிக்கிய நபருக்கு நேர்ந்த கதி!!

236

மோசமான சம்பவம்

கிளிநொச்சியில் திருமண நிகழ்வின் போது அன்பளிப்பாக வழங்கப்பட்ட பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கடும் நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிளிநொச்சி – கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் கடந்த ஜுன் மாதம் ஐந்தாம் திகதி இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பெருந்தொகை பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கடந்த ஜுன் மாதம் ஒன்பதாம் திகதி கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சி பொலிஸார் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிரீவி கமரா பதிவுகளை ஜுன் மாதம் 28ஆம் திகதி பார்வையிட்டு அதனை அடிப்படையாக வைத்து சந்தேகநபரொருவரை கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் அவரை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். இதன்போது சந்தேகநபர் விளக்கமறிலயில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றுமுன் தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையிலேயே சந்தேகநபரை கடும் நிபந்தனையுடன் கூடிய, கிராம அலுவலர் வதிவிடத்தை உறுதிப்படுத்திய தலா ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான இரு ஆட்பிணைகளிலும் 25,000 ரூபா பெறுமதியான காசுப்பிணையிலும் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதிக்கு வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் சந்தேகநபருக்கு சார்பாகவே செயற்பட்டு வருவதாகவும், இது தொடர்பான விரிவான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுக்க தவறுவதாகவும் கடந்த தவணைகளில் முறைப்பாட்டாளர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் தொலைபேசி உரையாடல்களின் அடிப்படையில் மேலும் இருவரை கைது செய்யவுள்ளதாக குறிப்பிட்டாலும் குறித்த இரு சந்தேகநபர்களையும் இதுவரை கைது செய்ய எந்தவித நடவடிக்கையும் பொலிஸார் எடுக்கவில்லை எனவும் சட்டத்தரணிகள் கூறியுள்ளனர்.