கையை இழந்த தந்தைக்காக மகனின் கண்டுபிடிப்பு : செயற்கை கையை உருவாக்கி சாதனை!!

251

தந்தைக்காக மகனின் கண்டுபிடிப்பு

முல்லைத்தீவு, மல்லாவி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தந்தை இழந்த கை ஒன்றுக்காக செயற்கை கையை தயாரித்துள்ளார். எஸ்.துஷ்யந்தன் என்ற இந்த இளைஞர் பல்கலைக்கழக மாணவர். நீண்ட நாள் ஆராய்ச்சிக்கு பின்னர் தனது தந்தைக்காக செயற்கை கை ஒன்றை தயாரித்து பொருத்தியுள்ளார்.

கணபதிப்பிள்ளை பத்மநாதன் என்ற இந்த இளைஞனின் தந்தையின் ஒரு கை 10 ஆண்டுகளுக்கு முன்னர் உழவு இயந்திரத்தில் சிக்கியதுடன் படுகாயம் ஏற்பட்டது. சத்திர சிகிச்சை மூலம் அவரது கை வெட்டி அகற்றப்பட்டுள்ளது.

சத்திர சிகிச்சையில் வெட்டி அகற்றப்பட்ட தனது தந்தைக்கு செயற்கை கையை பொருத்த முயற்சித்த போது, அதற்கு அதிக பணம் தேவைப்பட்டுள்ளது. இதனால், செயற்கை கையை பொருத்துவது பத்மநாதன் குடும்பத்திற்கு கனவாக மாறி போனது.

இதன் காரணமாக பத்மநாதனின் மகன் துஷ்யந்தன் அன்று முதல் எப்படியாவது தனது தந்தைக்கு செயற்கை கை தயாரிப்பது என்ற முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதற்கு அமைய 10 ஆண்டுகள் முயற்சிக்கு பின்னர், அவர் தனது தந்தைக்காக செயற்கை கையை தயாரித்து பொருத்தியுள்ளார். தந்தைக்காக செயற்கை கையை தயாரித்த இவருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.