புகையிரத ஊழியர்கள் வேலைநிறுத்தம் : வடக்கில் இரு புகையிரதங்கள் மட்டும் சேவை!!

317

புகையிரத ஊழியர்கள் போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இரு புகையிரதங்கள் மட்டும் வேலை நிறுத்த நேரத்திலும் வடக்கில் தமது பயணத்தை தொடர்ந்தன.

புகையிரத ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று பிற்பகல் முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாடாளாவிய ரீதியல் புகையிரத போக்குவரத்து சேவைகள் பாதிப்படைந்துள்ளது.

இருப்பினும், கொழும்பில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்த யாழ்தேவி புகையிரதம் மாலை வவுனியா ஊடாகச் சென்று யாழை இரவு அடைந்தது. அதேபோல் யாழில் 2.45 இற்கு பயணத்தை ஆரம்பித்த கடுகதிப் புகையிரதம் வவுனியா ஊடாக கொழும்பு நோக்கி பயணித்தது.

புகையிரத வேலை நிறுத்தம் அறிவிக்கப்படட பின்னர் குறித்த இரு புகையிரதங்கள் மட்டுமே வடக்கில் தமது சேவையை மேற்கொண்டன. வேலை நிறுத்தம் ஆரம்பிக்க முன்னர் இவை இரண்டும் பயணத்தை ஆரம்பித்தமையால் அவை தமது பயணத்தை தொடர்ந்ததால் பயணிகளின் நன்மைகருதி அவை தமது சேவையை வழங்கியதாக புகையிரத திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா புகையிரத நிலையத்திற்கு வந்த பயணிகள் மற்றும் இரவு புகையிரதத்திற்கு முற்பதிவு செய்தோர் என பலரும் புகையிரத திணைக்கள ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதேவேளை, குறித்த இரு புகையிரதங்கள் மூன்று மணித்தியாலங்கள் தாமதமாகவே பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.