மரணம் தொடும்போது..

539

எட்டு வயது காதலும் எட்டாத நேசமும்
பட்டு மாமியும் சிட்டு சிலுமிசமும்..

கொட்டும் அருவியும் கூவும் குயிலும்
கொடுத்த கடனும்கொடுக்காத முத்தங்களும்
கெடுத்த குடியும் கேட்டவன் சொல்லும்..

பள்ளியின் கடைசி நாளும் பட்டத்தின் பாராட்டும்
வள்ளி திருமணமும் வடிவேலன் தீர்த்தமும்
அம்மா அன்பும் ஆச்சி கொளுக்கட்டையும்..

எட்டிய வெற்றிகளும் எட்டா முடிவுகளும்
கட்டிய மனைவியும் கட்டில் அனுபவமும்
தொட்டில் தரு சுகமும் வாழ மகளும்..

தேடா உறவும் நிலையா
வாழ்வும் நில்லா உயிரும்
மூத்தவள் திருமணமும் பேத்தியின் பிறந்தநாளும்..

அப்பா சாவும்அடுத்தநாள் பாலுாற்றும்
அடுத்து கடா வெட்டும் அந்தியேட்டி அழைப்பும்..
அரையாண்டு மாசியமும் பறையும் சங்கும்..

பாடைப் பவணியும் எரியும் நெருப்பும்
உருகும் ஊனமும் கூடும் ஊரும்
கூத்தாடும் கும்பலும்
இவையெல்லாம் நினைவோடும்
மரணம் தொடும்போது..

-திசா.ஞானசந்திரன்-