முல்லைத்தீவு கடல் வழமைக்கு மாறாக இன்று காலை முதல் கொந்தளிப்பாக உள்ளமையின் காரணமாக கடற்கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களிற்கு இடம்பெயருமாறு தற்போது அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பொலிஸார் கடற் கரையோரங்களிற்கு சென்று இந்த அறிவித்தலை தற்போது விடுத்துள்ளனர். முல்லைத்தீவு கடற்கரையிலிருந்து 100 மீற்றருக்கு உட்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்களே இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதன்பின்னதாக கரையோர மக்கள் சிலர் இடம்பெயரத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் முல்லைத்தீவு கடற்பரப்பை காற்று கடக்கும் என இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்தார்.
தீத்தக்கரை, கொக்கிலாய், அலம்பில், செம்மலை, கள்ளப்பாடு கடற் பிரதேச மக்களை அவ்விடங்களிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு தாம் அறிவித்தல் விடுத்துள்ளதாக நாகலிங்கம் வேதநாயகம் குறிப்பிட்டார்.
கடல் அலை மூன்று மீற்றர் வரை உயரக் கூடும் என இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்தார்.





