முல்லைத்தீவு கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து கள்ளப்பாடு, அலம்பில், செம்மலை, வட்டுவாகல் உள்ளிட்ட கரையோர கிராமங்கள் உள்ளிட்ட கரையோரங்களைச்சேர்ந்த மக்கள் மேட்டு பிரதேசங்களிலுள்ள உறவினர்களின் வீடுகளுக்குச் செல்கின்றனர்.
கடும் காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளதை அடுத்தே அந்த பகுதிகளைச்சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இடம்பெயர்ந்துள்ளனர்.
முல்லைத்தீவின் கரையோரக் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதுடன், கடல்நீர் 3 அல்லது 4 மீற்றர் தூரத்திற்கு நிலப்பகுதிக்குள் உட்புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
பருத்தித்துறை கடலில் நீர் மட்டம் அதிகரிப்பு
இதேவேளை, யாழ். வடமராட்சி பருத்தித்துறை கரையோரப்பகுதிகளில் கடல் நீர் மட்டம் வழமைக்கு மாறாக நிலப்பகுதிக்குள் உட்புகுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்தியதையடுத்து கரையோரங்களிலுள்ள மக்கள் ஒரு கிலோமீற்றர் தூரத்திற்கு அப்பால் சென்றிருப்பது நல்லதென அப்பகுதி இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
இதனையடுத்தே கரையோரங்களில் இருக்கும் மக்கள் ஒரு கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள தங்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.






