தமிழக மீனவர்களை சந்தித்து பேசுகிறார் ராஜித்த சேனாரத்ன!!

487

Rajithaமீனவர் பிரச்சனை பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்திய மத்திய அரசின் அழைப்பின்பேரில் இந்தியா செல்லவுள்ள இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, தமிழ்நாட்டு மீனவர்களை டில்லியில் சந்தித்துப் பேசுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர் அமைப்பின் பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த சந்திப்புக்கு அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை மீன்பிடித்துறை அமைச்சின் ஆலோசகர்களில் ஒருவரும் இந்திய – இலங்கை மீனவர்கள் சங்க அமைப்பின் இலங்கை இணைப்பாளருமான எஸ்.பி.அந்தோனிமுத்து தெரிவித்தார்.

இதற்கிடையே தமிழகத்தில் எதிர்வரும் 20ம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள இலங்கை-இந்திய மீனவர்கள் இடையிலான பேச்சுவார்த்தைக்காக இலங்கைத் தரப்பினருக்கு இன்னும் உத்தியோகபூர்வமான அழைப்பு கிடைக்கவில்லை என்றும் அந்தோனிமுத்து கூறினார்.

எனினும் தமிழகம் சென்று பேச்சுவார்த்தை நடத்துவதற்கான மீனவர் பிரதிநிதிகள் குழுவினரை இலங்கை மீன்பிடித்துறை அமைச்சு ஏற்பாடு செய்துள்ளதாகவும் இந்திய – இலங்கை மீனவர்கள் சங்க அமைப்பின் இலங்கை இணைப்பாளர் தெரிவித்தார்.



டில்லியில் தமிழக மீனவர்கள் இலங்கை அமைச்சரை சந்திப்பதற்கான திகதி இன்னும் குறிக்கப்படவில்லை என்றபோதிலும், இந்த சந்திப்பு நிச்சயம் நடப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளன´ என்றார் அந்தோனிமுத்து.

அமைச்சர் ராஜித்த சேனாரத்ன அடுத்த வாரம் இந்தியா செல்வார் என்றும் இலங்கை மீன்பிடித்துறை அமைச்சின் ஆலோசகர் கூறினார்.

இதனிடையே இலங்கையிலிருந்து இந்தியா செல்ல ஏற்பாடாகியுள்ள இலங்கை மீனவர் பிரதிநிதிகள் 15 பேரில் 10 பேர் வரை வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

வடக்கு மீனவர் பிரதிநிதிகள் இந்தக் குழுவில் இடம்பெறவில்லை என்று அண்மையில் வெளியாகியிருந்த செய்திகளில் உண்மை இல்லை என்று மீன்பிடித்துறை அமைச்சு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளமையை அவர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரம் இலங்கை – இந்திய மீனவர்கள் இடையிலான சந்திப்பிற்கு இந்த விவகாரத்தில் ஏற்கனவே அனுபவமுள்ள மீனவர் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இருதரப்பு மீனவர் பிரச்சனைகள் தொடர்பில் காலங்காலமாக பேச்சுவார்த்தை நடத்திவந்துள்ள இலங்கையின் முக்கிய மீனவர் பிரதிநிதிகளை உள்ளடக்காமல் இந்த சந்திப்பின் முடிவுகள் பயன் இருக்குமா என்றும் இலங்கை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டாளர் ஹேர்மன்குமார சந்தேகம் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்மைய சில தீர்மானங்களே மீனவர் பிரச்சனை மோசமடையக் காரணம் என்று அண்மையில் இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன கூறியிருந்தார்.

இந்திய மத்திய அரசின் அழைப்பின் பேரிலேயே தான் இந்தியா செல்வதாகவும், அழைப்பு கிடைத்தால் தமிழக அரசுடனும் பேச்சுநடத்தத் தயார் என்றும் அவர் கூறியமை குறிப்பிடத்தக்கது.

-BBC தமிழ்-