5-0 என தொடரை கைப்பற்றிய அவுஸ்திரேலியா : கடும் நெருக்கடியில் இங்கிலாந்து!!

314

Australia

இங்கிலாந்துக்கு எதிரான ஆசஷ் டெஸ்ட் தொடரின் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய அணி அபார வெற்றியீட்டியுள்ளது.

சிட்னியில் கடந்த 3ம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியா 326 ஓட்டங்களையும், இங்கிலாந்து 155 ஓட்டங்களையும் பெற்றன.

இதன்படி 171 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்க தனது 2வது இன்னிங்சை ஆடிய அவுஸ்திரேலியா 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 140 ஓட்டங்களை எடுத்திருந்தது.
ரோஜர்ஸ் 73 ஓட்டங்களுடனும், பெய்லி 20 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 3வது நாள் ஆட்டம் தொடர்ந்தது. ரோஜர்ஸ் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 119 ஓட்டங்களை எடுத்து அவர் ஆட்டம் இழந்தார். முடிவில் அவுஸ்திரேலிய அணி 276 ஓட்டங்களில் சகல விக்கெட்டுக்களையும் பறிகொடுத்தது தனது இரண்டாவது இன்னிங்ஸை நிறைவு செய்தது.

இங்கிலாந்து சார்பில் போர்த்விக் 3 விக்கெட்டுக்களையும், ஆண்டர்சன், ஸ்டோக்ஸ் பிராட் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.

448 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்குடன் இங்கிலாந்து 2வது இன்னிங்சை விளையாடியது. எனினும் அவுஸ்திரேலியாவின் அபார பந்துவீச்சால் இங்கிலாந்து அணி 166 ஓட்டங்களிலேயே சுருண்டது.

இதனால் 3வது நாளிலேயே ஆஸி. அணி 281 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்று போட்டியை நிறைவு செய்தது.

இந்தப் போட்டியில் இரண்டு இன்னிங்களிலும் இங்கிலாந்து வீரர்கள் எவரும் அரைச்சதம் கூட கடக்கவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஆஸி. சார்பில் சிறப்பாக பந்து வீசிய ரியான் ஹாரிஸ் தெரிவு செய்யப்பட்டார்.

இவர் இரண்டாவது இன்னிங்சில் 25 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுக்களை சாய்த்திருந்தார். முதலாவது இன்னிங்ஸிலும் அவர் 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

தொடரின் சிறப்பாட்டக்காரராக ஆஸி. வீரர் மிச்சல் ஜோன்சன் தெரிவானார். இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேலியா 5-0 என இங்கிலாந்து அணியை வயிட்வாஷ் செய்துள்ளது.