
சென்னையில் தானாக உடலில் தீப்பிடிக்கும் குழந்தை மீண்டும் மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா நெடிமலையனூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி கருணா, இவர்களது குழந்தை ராகுல். பிறந்த 9வது நாளில் இருந்து குழந்தையின் வயிறு, கால்கள் மற்றும் தலைப்பகுதியில் தானாக தீப்பிடித்து எரிந்ததாக பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த யூன் மாதம் குழந்தையை சேர்த்தனர்.
குழந்தையின் தோலில் தீப்பிடித்து எரிவதற்கான வாயு வெளியேறுகிறதா என ரத்தம், வியர்வை, சிறுநீர் உள்ளிட்ட பல கட்ட பரிசோதனைகளை மருத்துவர்கள் செய்தனர். இதில் குழந்தைக்கு எந்த பிரச்னையும் இல்லை என தெரிந்தது.
தீவிர சிகிச்சைக்கு பிறகு குழந்தையை டிஸ்சார்ஜ் செய்த மருத்துவர்கள், 3 மாதத்துக்கு பிறகு குழந்தையை மீண்டும் சிகிச்சைக்கு அழைத்துவரவேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.
இதன்படி நேற்று காலை குழந்தை ராகுலுடன் பெற்றோர் மருத்துவமனைக்கு வந்தனர். குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு தலைமை மருத்துவர் நாராயணபாபு, பேராசிரியர்கள் ஜெயச்சந்திரன், சத்தியமூர்த்தி, தீக்காய சிகிச்சை பிரிவு நிபுணர் ஜெகன் மோகன் ஆகியோர் பரிசோதனை செய்தனர்.
இதுகுறித்து மருத்துவர் நாராயணபாபு கூறுகையில், இது ஆரோக்கியமான குழந்தை. தீக்காய புண் ஆறிவிட்டது. தழும்புகள் மறைவதற்கு கான்ட்ரா லுபகஸ் என்ற ஒயின்ட்மென்ட்டை தடவுமாறு சொல்லியிருக்கிறோம்.
அல்ட்ரா சவுன்ட், இசிஜி, எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்பட்டது என்றும் இதில் குழந்தைக்கு எந்த பிரச்னையும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
தீக்காய நிபுணர் ஜெகன் மோகன் கூறுகையில், குழந்தை வளரும்போது தழும்புகளும் விரிவடையும். இதை போக்க குழந்தைக்கு நான்கு அல்லது ஐந்தாவது வயதில் பிளாஸ்டிச் சர்ஜரி செய்யவேண்டிவரும் என்று கூறியுள்ளார்.
மருத்துவக் கல்லூரி டீன் ராமகிருஷ்ணன், மனநல மருத்துவர் ராஜரத்தினம் ஆகியோர் குழந்தையின் பெற்றோருக்கு கவுன்சலிங் கொடுத்தனர்.





