ஒரு பிரித்தானிய சிறுவனை சாதனையாளனாக்கிய இலங்கைப் பயணம்!!

280

பிரித்தானிய சிறுவன் ஒருவனின் இலங்கை பயணம், உயரிய ஒரு நோக்கத்திற்காக சாதனை படைப்பவனாக அவனை மாற்றியுள்ளது.

பத்து வயது சிறுவனான Oscar Walker, இந்த ஆண்டின் துவக்கத்தில் இலங்கைக்கு தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருக்கிறான்.

அங்கு கடல் ஆமைகள் காப்பகம் ஒன்றிற்கு சென்றபோது, ஆமைகள் கடலுக்கும் கடலின் சுற்றுச்சூழலுக்கும் எவ்வளவு அவசியமானவை என்பதை அறிந்து கொண்டிருக்கிறான் Oscar.

அங்கிருந்த ஆமைகளில் பெரும்பாலானவை மீனவர்கள் மீன் பிடிக்கும்போது வலைகளில் சிக்கி மீட்கப்பட்டவை.

அத்துடன் ஆமைகளின் முட்டைகள் சேகரிக்கப்பட்டு, ஆமைகளை கடத்துவோரிடமிருந்து தப்புவிப்பதற்காக பத்திரமாக பாதுகாக்கப்பட்டு, அவை குஞ்சு பொறித்ததும், அந்த சிறிய ஆமைகள் மீண்டும் கடலில் கொண்டு விடப்படுவதையும் கண்ட Oscar, தானும் ஆமைகளின் நலனுக்காக எதையாவது செய்யவேண்டும் என முடிவெடுத்ததாக தெரிவிக்கிறார் அவனது தாயாகிய Tara.

அதைத் தொடர்ந்து ஆமைகளின் நலனுக்காக நிதி திரட்டுவதற்காக மலையேற்றங்களில் ஈடு பட முடிவு செய்துள்ள Oscar, முதலாவதாக Mount Snowdon என்ற மலையில் ஏறியுள்ளான்.

தனது தாய் தந்தை, தாத்தா பாட்டி, மற்றும் அத்தையுடன் மலயேற்றத்தில் ஈடுபட்ட Oscarக்கு, 1,085 மீற்றர் உயரமுடைய அந்த சிகரத்தை அடைய மூன்று மணி நேரம் ஆகியிருக்கிறது.

ஆரம்பத்தில் மலையேறும்போது சாதகமான சூழல் இருந்தாலும், பின்னர் வெப்ப நிலை குறைந்து 5 டிகிரியை அடைந்திருக்கிறது.

என்றாலும் நினைத்ததை சாதித்து, அடுத்த மூன்று மணி நேரத்தில் மீண்டும் மலையிலிருந்து இறங்கியிருக்கிறது Oscarஇன் குடும்பம்.

இப்போதைக்கு 420 பவுண்டுகள் சேகரித்துள்ள Oscar, அதை ஆமைகள் நலனுக்காக வழங்க முடிவு செய்துள்ளதோடு, அடுத்து Ben Nevis மற்றும் Scafell Pike ஆகிய சிகரங்களை தொடுவதென முடிவு செய்துள்ளான்.