நல்ல சம்பளத்தில் உள்ள வேலையை உதறித்தள்ளிவிட்டு தமிழ் பெண் செய்து வரும் ஆச்சரிய செயல்!!

3


தமிழ் பெண் செய்து வரும் ஆச்சரிய செயல்


சென்னையில் நல்ல சம்பளத்தில் பணியில் இருந்த பொறியியல் படித்த பட்டதாரி பெண் வேலையை உதறிவிட்டு தரிசு நிலத்தை வளமான நிலமாக மாற்றும் பணியில் இறங்கியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை அருகே உள்ள பாதிரக்குடி கிராமத்தைச் சேர்ந்த சபாபதி- தேன்மொழி தம்பதியினரின் ஒரே மகள் குறிஞ்சிமலர். கடந்த 2018-ம் ஆண்டு பொறியியல் படிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு வேலைக்கு சென்ற குறிஞ்சிமலர், பணியில் திருப்தி இல்லாததால் சொந்த ஊரில் தனது உறவினர் ஒருவரின் தரிசு நிலத்தை வளமாக மாற்ற முடிவு செய்தார்.


குறிஞ்சிமலரின் ஆர்வத்தை பார்த்த உறவினரும் இரண்டரை ஏக்கர் இடத்தை வழங்கினர். தற்போது இரண்டரை ஏக்கர் நிலத்தில் 1,500 தேக்கு மரக்கன்றுகளை நட்டுள்ளார். அடுத்த ஆண்டு தேக்கு மரத்தில் மிளகு செடிகளை ஊடுபயிராக நடவு செய்யவும் திட்டமிட்டுள்ளார்.


இதுகுறித்து பேசிய குறிஞ்சி மலர், இனி நான் வேலைக்குப் போகமாட்டேன் விவசாயம் செய்யப் போகிறேன் என சொன்னதும், எல்லோரும் அ திர்ந்துவிட்டார்கள். பி.டெக் படிக்க 5 லட்சம் ரூபாய் வரை செலவழித்துள்ளோம். இனி திருமணம் செய்ய வேண்டுமென்றால் நல்ல வேலை வேண்டும் எனக் கூறி முட்டுக்கட்டை போட்டனர்.

ஆனாலும் நான் அவர்களிடம் விவசாயத்தில் சாதிப்போம் எனவும் பாதுகாப்பான தொழில், விவசாயம்தான் என எடுத்துக்கூறி அனுமதி பெற்றேன். மேலும், அதற்குரிய பயிற்சியும் எடுத்துக் கொண்டேன். குமிழ் சந்திரசேகர் என்பவர் எனக்கு வழிகாட்டியாக இருந்தார். கிடைத்த அனுபவத்தை வைத்து வீட்டுக்கு அருகிலேயே அவரை, பாகற்காய், புடலை, பீர்க்கங்காய், புளிச்சக் கீரை உள்ளிட்டவைகளைப் பயிர் செய்தேன்.

இதன் விதைகளை நன்றாகக் காயவைத்து, கல்சியம் சத்து மிகுந்த சுவற்றிற்கு அடிக்கும் சுண்ணாம்பை விதைகளின் மீது லேசாகத் தெளித்து நிலத்தில் ஊன்றினேன். நன்கு வளர ஆரம்பித்த செடிகள், பின்னர் காய்த்துக் குலுங்கத் தொடங்கின. அன்றைக்கு என் மனம் கண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

என்னுடைய உறவுக்காரர் ஒருவர், இரண்டரை ஏக்கர் நிலத்தை, தேக்கு மரக்கன்றுகள் ஊன்றிக் கொடுக்க வேண்டும் என என்னிடம் ஒப்படைத்தார். நிலத்தின் பரப்பை வைத்து 1,500 கன்றுகள் ஆகும் எனச் சொன்னேன். உடனே வாங்கிக் கொடுத்துவிட்டார். இந்த தேக்குமரக்கன்றுகளில் ஓராண்டு கழித்து ஊடுபயிராக மிளகு செடியை வளர்த்து பணப்பயிராக மாற்ற உள்ளோம்.

வரும் காலத்துல பெரிய பெண் விவசாயியாக இருக்க வேண்டும் என்பதே என் லட்சியம் என கூறியுள்ளார். குறிஞ்சிமலர் விவசாயத்தில் கலக்கி வருவதற்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.