விக்னேஸ்வரனின் கருத்து தமிழீழ கோரிக்கையை கைவிடவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டு : வசந்த பண்டார!!

558

wasantha-bandaraஒற்றையாட்சியை கைவிட்ட புதிய அரசியலமைப்பு தேவையென்ற முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத்தானது தனித் தமிழீழக் கொள்கையை இன்னமும் இவர்கள் கைவிடவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளதென தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.

வடக்கு ஆளுநரை வெளியேற்றும் வரை மத்திய அரசுடன் வடமாகாண சபை மிதவாதப்போக்கினை கடைபிடிக்குமென்று அவர் தெரிவித்தார். இது தொடர்பாக டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்..

நாட்டின் தற்போதைய அரசியலமைப்பு மாற்றப்பட வேண்டுமென்ற விவாதம் பல்வேறு தரப்புகளால் மேலெழுப்பப்பட்டுள்ளது. ஆனால், இதனை பாராளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு உள்ள மூன்றிலிரண்டு பெரும்பான்மையை வைத்து செய்துவிட முடியாது.

மாறாக மக்கள் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப் பட வேண்டியது அவசியமாகும். இதன்போது நிச்சயம் பெரும்பான்மை இனத்தவரின் அபிலாஷைகளுக்கமையவே புதிய அரசியலமைப்புகளுக்கு ஆதரவு கிடைக்கும். அது ஒற்றையாட்சியை ஆதரிப்பதாகவே அமையும்.

ஒற்றையாட்சிக்குள், பிளவுபடாத நாட்டுக்குள், அதிகாரப்பரவலாக்கலை ஏற்றுக்கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருந்தது. ஆனால், இன்று கூட்டமைப்பின் முதலமைச்சர் ஒற்றையாட்சி கைவிடப்பட்ட அதிகாரப்பரவலாக்கலுடனான புதிய அரசியலமைப்பே தேவையென்கிறார்.

அப்படியானால் இதன் உள்ளார்ந்தம்தான் என்ன, கூட்டமைப்பினர் இன்னமும் தமிழீழக் கொள்கையை வைவிடவில்லையென்பதே ஆகும். எதிர்காலத்தில் எப்படியாவது தனித் தமிழீழத்தை உருவாக்குவதே இவர்களது ஒரே இலக்காக இருக்கின்றதென்பதை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வெளிப்படுத்தியுள்ளார்.

ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரங்களை பரவலாக்க முடியும். அதன் கீழேயே நாடு பிரியாது பாதுகாக்கப்படும். நாட்டின் ஒற்றுமையை விரும்பாதவர்களே ஒற்றையாட்சியை எதிர்க்கின்றனர்.

இவ்வாறான நிலைப்பாடுகள் தலைதூக்கும் போது எவ்வாறு இனங்களிடையே நல்லிணக்கத்தை, நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.

தமிழீழ இலக்கை அடைய தடையாகி இருப்பவர் வடமாகாண ஆளுநர். எனவே, ஆளுநரை வெளியேற்றிக் கொள்வதற்காக ஜனாதிபதியுடன் முதலமைச்சர் மிதவாதப்போக்கை கடைப்பிடிக்கின்றார்.

அதன் பின்னர் மத்திய அரசுடன் மோதல்களை ஏற்படுத்திக் கொண்டு தமிழீழ இலக்கை நோக்கிப் பயணிப்பது நிச்சயமாகுமென்றும் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார்.