கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதம் தடம்புரள்வு : தவிர்க்கப்பட்ட பாரிய விபரீதம்!!

682

புகையிரதம் தடம்புரள்வு

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதமொன்று தடம்புரண்டுள்ளதாக கலாவெவ புகையிரத நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். குறித்த சம்பவம் நேற்றிரவு 11 மணியளவில் அவுக்கன – கலாவெவ பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்போது புகையிரதத்தின் சில பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து சரிந்துள்ள நிலையில் மரத்தினாலான சிலிப்பர் கட்டைகள் சேதமடைந்துள்ளன. எனினும் இந்த சம்பவத்தினால் பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் நேரவில்லை என தெரியவருகிறது.

புகையிரத என்ஜின் பாலத்தை கடந்து செல்ல முன் இந்த சம்பவம் நேர்ந்துள்ளதால் பாரிய விபரீதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சம்பவம் இடம்பெற்றபோது குறித்த புகையிரதத்தில் 250 பயணிகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.