வவுனியா உள்ளூராட்சி சபை சுகாதார ஊழியர்கள் நிரந்தர நியமனம் வழங்கக் கோரி தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில்!!(படங்கள்)

481

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க வவுனியா கிளையின் ஏற்பாட்டில் இன்று முதல் வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு பிரதேச சபை, செட்டிகுளம் பிரதேசசபை, வவுனியா வடக்கு பிரதேசசபை ஆகியவற்றில் நிரந்தர நியமனம் இன்றி தற்காலிக அடிப்படையில் கடமையாற்றி வந்த ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் இத் தொழிலாளர் சங்க வவுனியா தலைவர் சித்திரன் கருத்துத் தெரிவிக்கையில்..

கடந்த ஏழு எட்டு வருடங்களுக்கு மேலாக சுகாதார ஊழியர்களாகவும் சாரதிகளாகவும் காவலாளிகளாகவும் பலர் உள்ளூராட்சி சபைகளில் வேலை செய்து வந்தனர். ஆனால் தற்போது தரம் 11 படித்தவர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு கொடுக்கப்படும் எனவும் ஏனைய எமது ஊழியர்கள் கல்வித் தகமையை கொண்டிருக்காவிட்டால் நியமனம் வழஙகப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களை வேலைக்கு அமர்த்தும் போது இவ்வாறான நிபந்தனைகள் எதுவும் வழங்கப்படவில்லை. எனவே பலவருடங்களாக கடமையாற்றி வந்த ஊழியர்களுக்கு முன்னுரிமையளித்து நியமனம் வழங்கப்படவேண்டும்.

இதற்கான உறுதி மொழியை பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் வழங்கும் வரை எமது போராட்டம் தொடரும் எனவும் காவலாளிகளுக்கு என வவுனியா நகரசபையால் வருடாந்தம் 70 லட்சம் ரூபாய் செலவு செய்யப்படுகின்றது.



இதுவரை காலமும் காவலாளிகளாக பணியாற்றியவர்களை நிறுத்திவிட்டு தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து காவலாளிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது நிறுத்தப்பட்டு ஏற்கனவே காவலாளிகளாக கடமையாற்றியவர்களை உள்வாங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்களான இ.இந்திரராஜா, ம.தியாகராஜா, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரமுகர் ந.ரஜீவன் தமிழர் விடுதலைக் கூட்டனியின் வன்னித் தேர்தல் தொகுதி அமைப்பாளர் இராஜகுகனேஸ்வரன் ஆகியோர் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுடன் கலந்துரையாடியதுடன், இவ் விடயம் தொடர்பில் மாகாணசபையின் கவனத்திற்கு கொண்டு வந்து நீதியினைப் பெற்றுத் தருவதாக தெரிவித்தனர்.

v1 v2 v3 v4