தாழமுக்கம் காரணமாக வவுனியாவில் தொடர்ந்தும் பலத்த மழை பெய்துவருகின்றது. இதனால் மக்கள் தமது அன்றாட வேலைகளை செய்யமுடியாது சிரமப்பட்டு வருகின்றனர். கடும் குளிரான காலநிலை நிலவுவதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் பலர் இடம்பெயர்ந்துள்ளனர்.
வவுனியா கந்தன்குளம் கிராமத்தில் 43 குடும்பங்களைச் சேர்ந்த 170 பேர் மழை காரணமாக பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா மாவட்ட உதவிப்பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,
நேற்று இரவு பெய்த கடும் மழையின் காரணமாக பூவரசன்குளம் கிராமசேவகர் பிரிவில் உள்ள கந்தன்குளம் கிராமத்தில் 43 குடும்பங்கைள சேர்ந்த 170 பேர் தற்காலிக வீடுகளில் இருந்தமையினால் நீர் வீடுகளுக்குள் சென்றமையினால் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இதேவேளை அக் கிராமத்தில் 10 குடும்பங்கள் அப் பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தற்போது அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் தரப்பால்கள் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் 20 வீடுகளினுள் நீர் உட்புகுந்ததால் அதில் வசித்த மக்கள் பாதிப்படைந்து வேறு இடங்களில் தங்கியுள்ளனர். எனவே அவர்களுக்கும் தரப்பால்கள் வழங்கப்பட்டுள்து.
வவுனியா பிரமனாளங்குளத்தில் மண் வீடொன்றின் இரண்டு பக்க சுவர்களும் இடிந்து வீழ்ந்துள்ளமையினால் அவ் வீட்டில் இருந்தவர்கள் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளனர். அவர்களுக்கும் உடனடியாக மாற்று இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் சாஸ்திரிகூழாங்குளம் சிறு சேத்திற்கு உள்ளாகியுள்ளமையால் அதனை சீர் செய்வதற்கு விவசாயிகளுக்கு அறிவுறுத்தில் வழங்கப்பட்டுள்ளதுடன் இராணுவத்தினரும் குளத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தை சீர்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர் எனவும் கூறினார்.
மேலும் தாழ் நிலப்பிரதேசங்களில் நீர் நிரம்பிக் காணப்படுவதுடன் திருநாவற்குளம், கள்ளிக்குளம் போன்ற கிராமங்களில் உள்ள சில வீடுகளினுள் நீர் உட்புகுந்துள்ளது.
மேலும் வரண்ட நிலமாக காணப்பட்ட வயல் பிரதேசங்களில் நீர் நிரம்பிக்காணப்படுவதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எனினும் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட வவுனியா வடக்கு பிரதேசத்தில் கொட்டகைகளில் வாழும் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இதேவேளை வவுனியா மாவட்டத்தின் சிறிய நீர்ப்பாசன குளங்களில் நீர் நிரம்பி வழிவதுடன் ஆறுகளிலும் நீர் பெருக்கெடுத்துள்ளது.