இன்றைய காலநிலை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் அடுத்த சில நாட்களுக்கு உயர்வாகக் காணப்படுகின்றது.இன்றைய கால நிலை குறித்து வானிலை அவதான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 50-75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இதேவேளை, புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கொழும்பிலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது வடமேற்கு முதல் வடகிழக்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது (மணித்தியாலத்துக்கு 70-80 கிலோ மீற்றர் வரையான) பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும்கொந்தளிப்பாகவும் காணப்படும்.




