வவுனியாவில் ஐந்து வர்த்தகர்களுக்கு நேர்ந்த கதி!!

465

வர்த்தகர்களுக்கு நேர்ந்த கதி..

வவுனியாவில் டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த பொது சுகாதாரப் பரிசோதகர்களினால் கால அவகாசம் வழங்கியும் கட்டுப்படுத்த தவறிய ஐந்து வர்த்தகர்களுக்கு எதிராக நேற்று நீதிமன்றத்தால் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகர்ப்பகுதியில் அதிகரித்து காணப்படும் டெங்கு நுளம்பின் தாக்கத்தை கட்டுப்படுத்தவும் வர்த்தக நிலையங்களைச் சீரமைக்கவும் பொது சுகாதார பரிசோதகர்களினால் களப்பரிசோதனை மேற்கொண்டு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும் அக்கால அவகாசத்திற்குள் நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்த தவறிய வர்த்தக நிலைய உரிமையாளர்கள் ஐந்து பேருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கையின்போது வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவருக்கு தலா 25ஆயிரம் ரூபாய் வீதம் ஐந்து வர்த்தகர்களுக்கும் ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா நீதிமன்றத்தினால் தண்டமாக விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் 30ஆம் திகதி முதல் 2ஆம் திகதி வரையும் தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு பொது சுகாதாரப்பரிசோதர்களுடன் சுகாதாரத் தொண்டர்கள் இணைந்து வவுனியா நகர்ப்பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாளை 2ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டு வரும் இந்நடவடிக்கையில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் அவதானிக்கப்பட்ட வீடுகள், வியாபார நிலையங்கள், அரச, தனியார், பாடசாலைகள், நிலையங்கள் திணைக்களங்களுக்கு சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிட்டு அவற்றிற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கால அவகாசங்கள் வழங்கப்படவும் உள்ளது.

இதன்போது தமது இருப்பிடங்கள், வர்த்தக நிலையங்களை துப்பரவு செய்து உதவுமாறு பொது சுகாதாரப் பரிசோதகர்களினால் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.