அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணிபுரிந்து வந்த தேவயானி கோப்ரகடே, விசா மோசடி புகாரில் கைது செய்யப்பட்டார்.
அவரை கைது செய்து நடத்திய விதத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்திய அரசு, இதற்காக அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவர் மீதான வழக்கை மீளப் பெற வேண்டும் என்றும் வற்புறுத்தி வருகிறது.
ஆனால் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்ட அமெரிக்க அரசு அவர் மீது நடவடிக்கை எடுப்பதிலும் உறுதியாக உள்ளது.
வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்வதற்கான காலக்கெடுவை வருகிற 13ம் திகதியில் இருந்து மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்று தேவயானியின் வக்கீல் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கக்கூடாது என்று அமெரிக்க அரசு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.
இந்த நிலையில் இந்திய அரசும் பல்வேறு பதிலடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் அனுபவித்து வந்த பல்வேறு சலுகைகள் பறிக்கப்பட்டு உள்ளன. தற்போது அடுத்த கட்ட நடவடிக்கையாக அமெரிக்க தூதரகங்கள் மேற்கொண்டுவரும் வர்த்தக செயல்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் உள்ள அமெரிக்க சமூகத்தினர் ஆதரவு சங்கத்தின் சார்பில் உணவு-மதுபான விடுதி, வீடியோ கிளப், நீச்சல் குளம், விளையாட்டு அரங்குகள், அழகு நிலையங்கள் போன்ற பல்வேறு வர்த்தக பணிகளில் அமெரிக்க தூதரகங்கள் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தூதரக ஊழியர்கள் அல்லாத இந்தியாவில் உள்ள மற்ற அமெரிக்கர்களுக்காக நடத்தப்பட்டு வரும் இந்த வர்த்தக பணிகள் தொடர்பான வருமானவரி கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை, வியன்னா மாநாட்டு சட்ட விதிகளுக்கு முரணானது என்று கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
போக்குவரத்து விதிகளை மீறும் அமெரிக்க தூதரக வாகனங்கள் மீது மற்ற வாகனங்களைப் போல் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.





