வவுனியா நகர சபை மற்றும் பிரதேச சபைகளில் நீண்டகாலமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய சுகாதார தொழிலாளிகள், சாரதிகள் மற்றும் வேலைப் பகுதி தொழிலாளர்கள் முக்கிய முன்று கோரிக்கைகளை முன்வைத்து தொடர் வேலை நிறுத்தப் போராட்டமொன்றினை நேற்று முன்தினம் ஆரம்பித்திருந்தனர்.
இந்த நிலையில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், இ.இந்திரராஜா, மா.தியாகராசா ஆகியோரும் ஊழியர்களை சந்தித்து உரையாடியதுடன் அவர்களின் கோரிக்கைளை முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு அனுப்பியிருந்தனர்.
இந்த நிலையில் வடமாகாண முதலமைச்சர் அவர்களை மாகாண சுகாதார அமைச்சர் அவர்கள் நேற்று முன்தினம் சந்தித்து இதுதொடர்பாக நீண்ட நேரம் உரையாடியதுடன், இதுதொடர்பில் முக்கிய முடிவுகள் எட்டப்பட்டதாக தெரிவித்தார்.
இதுதொடர்பில் நேற்று காலை வவுனியா நகர சபை கேட்போர் கூடத்தில் ஊழியர் சங்க பிரதிநிதிகளுடனான கூட்டமொன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வடமாகாண சுகாதார அமைச்சர் அவர்கள் முதலமைச்சர் அவர்களுடனான சந்திப்பு தொடர்பில் (தொலைபேசி மூலம்) உரையாற்றினார். வடமாகாண சுகாதார அமைச்சர் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில்..
நடைபெற்ற முதலமைச்சருடனான கூட்டத்தில் இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உறுதியளித்ததாகவும் இம்மாதம் 31 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குமாறு ஊழியர்களை கேட்டுக்கொண்டதாகவும் ஏற்கனவே வவுனியா நகரசபையினால் ஏற்கனவே கோரப்பட்ட விண்ணப்பம் இரத்து செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கூறப்பட்டது.
அத்துடன் ஏற்கனவே அமைய அடிப்படையில் வேலை செய்பவர்களின் விடயங்களை பரிசீலித்து அவர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுப்பதற்காக முதலமைச்சர் அவர்கள் என்னை பணித்துள்ளார்.
இதனடிப்படையில் ஊழியர்களுக்கு சாதகமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் ஊழியர்களுக்கான ஒப்பந்தம் ஜனவரி மாதம் முதல் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன்,
இதுதொடர்பில் எழுத்துமூல உறுதிமொழி வழங்கப்பட்டதை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக தெரிவித்த ஊழியர்கள், நீண்டகாலமாக அதிகாரிகளின் அசமந்தப்போக்கினால் தாங்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டதாகவும் எனவே இந்த மாகாண சபை இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றைப் பெற்றுத்தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
இக்கூட்டத்தில் வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், இ.இந்திரராஜா, ம.தியாகராஜா, நகரசபையின் செயலாளர், வர்த்தகர் சங்க பிரதிநிதிகள், வரியிறுப்பாளர் சங்க பிரதிநிதிகள், சுகாதார அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் மற்றும் ஊழியர் சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
இவ்விடயம் தெடர்பாக சுகாதார அமைச்சர் அவர்கள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களுடன் தொடர்பு கொண்டு நிலைமை தொடர்பில் விளக்கமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.