ராஜா ராணியால் ஏ.ஆர்.முருகதாசுக்கு பிரச்சனை : நீதிமன்றத்தில் வழக்கு!!

258

Raja Raniராஜா ராணி படத்தில் ஏர் வாய்ஸ் நிறுவனத்தின் பெயரை தவறாக பயன்படுத்தியதற்காக அப்படத்தை தயாரித்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2006ம் ஆண்டு ஏர் வாய்ஸ் இன்ஃபோகாம் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் ஈரோட்டில் துவங்கப்பட்டு மும்பையில் டிரேட் மார்க்கை பதிவு செய்துள்ளது.

இந்நிலையில் அண்மையில் வெளியான ராஜா ராணி படத்தில் ஜெய் மற்றும் சத்யன் ஏர்வாய்ஸ் நிறுவனத்தில் வேலை பார்ப்பது போன்று காண்பித்திருந்தனர். மேலும் அந்நிறுவன சேவையில் குறைபாடு உள்ளது போன்ற காட்சிகள் இருந்ததாகக் கூறி ஏர் வாய்ஸ் அதிருப்தி அடைந்துள்ளது.

இதையடுத்து ராஜா ராணி படத்தை தயாரித்த பாக்ஸ் ஃபோர் ஸ்டூடியோ, நெக்ஸ்ட் பிக் பிலிம் தயாரிப்பாளரான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் மீது ஈரோடு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் இனி திரையரங்கு, டிவிடி மற்றும் தொலைக்காட்சியில் ராஜா ராணி படத்தை ஒளிபரப்புகையில் ஏர் வாய்ஸ் நிறுவனத்தின் பெயர் கொண்ட காட்சிகளை காண்பிக்க தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி சதீஸ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் வரும் 27ம் திகதி முருகதாஸ் மற்றும் தயாரிப்பு பொறுப்பாளர்கள் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.