வவுனியா, முதலியார்குளம் றோமன் கத்தோலிக்க அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் ஒருவருட காலமாக அதிபர் பதவியில் வெற்றிடம் நிலவுவதாகவும் விரைவில் அதிபரொருவரை நியமிக்குமாறு வலியுறுத்தி பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஒரு வருடமாக இப்பாடசாலையில் நிரந்தரமாக அதிபர் நியமிக்கப்படாத நிலையில் பாடசாலை நிர்வாக கட்டமைப்பு சிதைவடைந்துள்ளதாகவும் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு போதுமான ஆசிரியர் இல்லை எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் தெரிவித்தனர்.
இப்பாடசாலையில் அதிபர் இன்மையானது தமது பிள்ளைகளுக்கு கல்வி நடவடிக்கையை பாதிப்பதாகவும் ஐந்தாமாண்டு மாணவர்களுக்கு ஆசிரியர் இதுவரை நியமிக்கப்படவில்லை எனவும் கணித பாட ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்ட போதிலும் இதுவரை அவ்விடத்திறகு புதிய ஒருவர் நியமிக்கப்படவில்லை எனவும் பாடசாலையின் போதிய வளங்கள் இல்லாமையினால் பாடசாலை மாணவர்களின் இணைப்பாடவிதான செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தனர்.
இவ்விடயம் தொடர்பாக வவனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளருக்கும் வட மாகாண கல்வி அமைச்சர் உட்பட உயர் அதிகாரிகளுக்கு அறிவித்த போதிலும் இதுவரை அதிபர் நியமிக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டினர்.
இதேவேளை நேற்றைய தினம் வட மாகாண கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் இப்பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடிய போதிலும் அவர்களும் ஆக்கபூர்வமான பதிலை வழங்காத நிலையிலேயே தாம் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
வட மாகாண கல்வி அமைச்சரே அதிபரை நியமித்து மாணவர்களின் கல்வி செயற்பாட்டுக்கு ஊக்கமளியுங்கள், அதிபரை நியமிக்க ஒரு வருடம் தேவையா, அதிபர் இன்றி நிர்வாக கட்டமைப்பு சீரின்றியுள்ளது என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்ரன் சோமராஜா ஒரு வாரத்துக்குள் இப்பாடசாலைக்கான அதிபர் ஒருவரை நியமிப்பதாக எழுத்து மூலமாக உத்தரவாதம் அளித்ததன் பின்னர் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.