இலங்கையில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண கூடுதல் அவகாசம் தேவை : இஸ்ரேலில் செய்தியாளரிடம் மகிந்த ராஜபக்ச!!

701

Mahinda

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இஸ்ரேல் நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அங்கு அவர், இஸ்ரேல் நாட்டு பிரதமர் ஷிமோன் பெர்ஸ்ஸூடன் இணைந்து கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது..

தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இலங்கை வடபகுதியில் அரசு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இலங்கை அரசு எப்போதும் அமைதியை ஆதரிக்கிறது. அனைத்து மக்களும் அமைதியாக வாழ வேண்டும் என்பதையே விரும்புகிறது.

தீவிரவாதிகளுக்கு எதிராக 30 ஆண்டுகளாக இலங்கையில் போர் நடைபெற்றது. இதனால் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது.

ஆனால் தற்போதோ கடந்த 4 ஆண்டுகளாக இலங்கையில் அமைதி நிலவுகிறது. 2009ஆம் ஆண்டில் தீவிரவாதத்தை பூண்டோடு இலங்கை ஒழித்து விட்டது. தீவிரவாதத்தை ஒழித்து விட்ட போதிலும், தற்போது சர்வதேச நாடுகளின் நிர்ப்பந்தத்தை இலங்கை சந்தித்து வருகிறது.

போர்க்குற்றம், மனித உரிமை விவகாரத்தில் இலங்கை மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண, இலங்கைக்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது.

ஆண்டுதோறும் மார்ச் மாதம் அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறை ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக மேலை நாடுகள் தீர்மானம் கொண்டு வருகின்றன. இதனால் அந்த நாடுகளுடன் இலங்கை மோதல் போக்கை கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது.

இலங்கை வடபகுதியில், புதிதாக ரயில்வே பாதைகள், சாலைகள், மின்சார வசதி, தண்ணீர் வசதி, மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்கள் அமைத்திருக்கிறோம். இதற்காக 400 மில்லியன் டொலர்களை எங்களது அரசு செலவழித்திருக்கிறது.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், இலங்கையின் வடபகுதியை பொருளாதார ரீதியில் முன்னேற்றியிருப்பதோடு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலிகள் 14 ஆயிரம் பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைக்கப்பட்டிருக்கிறது. இலங்கை இராணுவம் மற்றும் காவல்துறையில் தமிழர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களும் பங்கேற்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது என்று மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.